• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாஜக வேட்பாளர் ஜூம் மீட்டிங்கில் ஆபாச வீடியோ: தமிழிசை ஆவேசம்

Byவிஷா

Apr 15, 2024

தென்சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் தமிழிசைசௌந்தரதாஜன் கலந்து கொண்ட இணையவழி உரையாடலின் போது ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்டதற்கு, தனது முகநூல் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தென் சென்னை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தனது தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அத்தொகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளிடம் அவர் ஜூம் மீட்டிங் மூலம் பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் பலர் கலந்துகொண்டனர். அந்த இணையவழி உரையாடலின் போது, திடீரென ஆபாச வீடியோ ஒளிபரப்பப்பட்டது என்று கூறப்படுகிறது. இதனால் அந்த மீட்டிங் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பாக கண்டனம் தெரிவித்து தனது முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கிறார் தமிழிசை சௌந்தரராஜன். அதில் அவர் பேசியிருப்பதாவது:
“அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வாக்காளர்களிடத்தில் எனக்கு ஆதரவு தருமாறு கேட்க திட்டமிட்டேன். அவர்களை நேரில் சந்திக்க முடியவில்லை என்பதால், இணையவழி உரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த மீட்டிங்கில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து தெரிந்து கொள்ளவும் முடிவு செய்திருந்தேன். இதில் பலர் ஆர்வமாக கலந்து கொண்டனர். உரையாடல் தொடங்கிய சில நிமிடங்களில் ஆபாசமான படங்கள் அதில் பகிரப்பட்டன. இதன் மூலம் வேட்பாளருக்கும், வாக்காளர்களுக்கும் இடையிலான இணைப்பை துண்டிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் தங்களது பிரச்னைகளை தெரிவிக்காத வகையிலும், நான் தாமரை சின்னத்துக்கு ஆதரவு கேட்கக்கூடாது என்ற மோசமான நோக்கிலும் எதிர்க்கட்சியினர் இதை செய்தனர். குறிப்பாக தமிழகத்தில் ஆட்சியில் உள்ள தி.மு.க-வை இதற்கு நேரடியாக குற்றம் சுமத்துகிறேன். இது கேவலமான அரசியல். இதன் மூலம் எங்களுக்கும், மக்களுக்குமான தொடர்பை துண்டிக்க முடியாது. பெண்கள் இணைய வெளியில் சுதந்திரமாக பேசக்கூட முடியவில்லை. இதை யாரால் பொறுத்துக் கொள்ள முடியும்.
அரசியலை தூய்மை படுத்த நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம். நேர்மையான அரசியல் செய்வது அவசியம். இந்த அதிர்ச்சிகர செயலுக்கு நான் வருந்துகிறேன். நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்து இவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்”
இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறார்.