• Mon. May 6th, 2024

தமிழகத்தில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக அறிவிப்பு

Byவிஷா

Apr 5, 2024

தமிழகத்தில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானதாகவும் இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹ_ அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,
நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 3.63 லட்சம் புகார்கள் வந்த நிலையில், 3.35 லட்சம் பொது சுவர்கள், பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த சுவரொட்டி, பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. 1.33 லட்சம் புகார்கள் வந்த நிலையில், 1.25 லட்சம் தனியார் இடங்களில் வைக்கப்பட்டிருந்த சுவரொட்டி, பேனர் அகற்றப்பட்டுள்ளது.
6.23 கோடி வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணி தொடங்கப்பட்டு, இதுவரை 13.08 லட்சம் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 13-ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்கப்படும். அரசியல் கட்சிகள் சார்பில் மார்ச் 20 முதல் 27-ம் தேதி வரை அளிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் 807 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பதற்றமான வாக்குச்சாவடிகள் என்பது மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் துறையினர், பொது பார்வையாளர்கள் ஆய்வின் அடிப்படையில் 2 வகைகளில் நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது, ஜாதி, இன ரீதியில் வாக்காளர்களுக்கு அச்சுறுத்தல்ஏற்படும் வகையிலான சூழல் இருந்தால், அப்பகுதியில் இருப்பது பாதிக்கப்படுகிற அல்லது பதற்றமான வாக்குச்சாவடியாக அறிவிக்கப்படும். அதன்படி, தமிழகத்தில் 8,050 வாக்குச்சாவடிகள் உள்ளன. அதிகபட்சமாக மதுரையில் 511, தென்சென்னையில் 456, தேனியில் 381 வாக்குச்சாவடிகள் உள்ளன.
அதேபோல, கடந்த தேர்தலில் அதிக வாக்குகள் பதிவான, ஒரே நபருக்கு அதிக வாக்குகள் பதிவான வாக்குச்சாவடிகள் ‘கிரிட்டிகல்’ அல்லது மிக பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 181 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அதிகபட்சமாக திண்டுக்கல் தொகுதியில் 39, வடசென்னையில் 18, அரக்கோணத்தில் 15 வாக்குச்சாவடிகள் இந்த வகையில் வருகின்றன. இந்த வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கண்காணிப்பு, நேரலை கண்காணிப்பு (வெப் ஸ்ட்ரீமிங்) ஆகிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நுண் பார்வையாளர்கள், கூடுதலாக துணை ராணுவ படையினர் நியமிக்கப்படுவார்கள். பிரதமரின் ‘ரோடு ஷோ’ உள்ளிட்டவற்றை பொருத்தவரை, அவருக்கென தேர்தல் விதிகளில் சில விலக்குகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *