• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

எந்த சிலையும் வைக்கக் கூடாது: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!

ByA.Tamilselvan

Nov 17, 2022

தமிழகத்தில், அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்கக் கூடாது. அவ்வாறு அனுமதி இல்லாமல் சிலை வைத்தால் உடனடியாக அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “விருதுநகர் அம்மச்சியாபுரத்தில் தியாகி இம்மானுவேல் சேகரன் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை வைப்பதற்கு அரசு உரிய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த தனி நீதிபதி, அரசின் அனுமதி இல்லாமல் சிலை வைக்கக்கூடாது. எனவே, தற்போது வைக்கப்பட்டுள்ள சிலையை அகற்றி பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். அரசு அனுமதி பெற்ற பின்பு இந்த சிலையை வைக்கலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பாலசுப்பிரமணியன் மேல்முறையீடு செய்திருந்தார்.
இதனை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழகத்தில் எந்த இடமாக இருந்தாலும் அரசின் முறையான அனுமதி பெற்ற பின்பு தான் சிலை வைக்கப்பட வேண்டும். அவ்வாறு அனுமதி இல்லாமல் சிலை வைத்தால் உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு அனுமதி இல்லாமல் வைக்கப்படும் சிலைகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது எனவே, இம்மானுவேல் சேகரனின் சிலை வைப்பதற்கு மனுதாரர்கள் அரசை அணுக வேண்டும். அதனடிப்படையில் அரசு உரிய உத்தரவை பிறப்பிக்கலாம் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.