ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தும் திட்டம் எதுவுமில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை ராணிமேரி கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்ஃப்ளூயன்சா வைரஸ் பாதிப்பு காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகள் நடத்தும் திட்டமில்லை. ஒருவேளை இன்ஃப்ளூயன்சா வைரஸால் காரணமாக பாதிப்புகள் அதிகரிக்கும் பட்சத்தில் சுகாதாரத்துறையுடன் பேசி பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும். தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கிய போது, தமிழ்த் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. இதற்கான காரணம் குறித்து ஆராயப்படும். பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்கள் கிருஷ்ணகிரி, கரூர், தர்மபுரி உள்ளி்ட்ட மாவட்டங்களில் அதிகம் உள்ளனர். அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் உரிய விளக்கம் கேட்கபப்ட்டுள்ளது. எனினும், தேர்வு எழுதத் தவறிய 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படவில்லை. அடுத்துவரவுள்ள 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதற்கு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.