• Sat. Apr 27th, 2024

ட்விட்டருக்கு இனி கட்டணம்.. எலான் மஸ்க்-ன் தந்திரம்

Byகாயத்ரி

May 2, 2022

மின்சாரக் கார் தயாரிப்பு, விண்வெளி ஆராய்ச்சி என பல துறைகளில் தடம் பதித்து உலகின் மிகப்பெரிய பணக்காரராக உள்ள எலான் மஸ்க், சமூக ஊடகத்துறையிலும் கால் பதித்துள்ளார். அதுவும் சாதாரணமாக அல்லாமல், முன்னணி சமூக ஊடகமான ட்விட்டரை முழுமையாக வாங்கியுள்ளார். கடந்த வாரம் உலகம் முழுக்க மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதே. முதலில் ட்விட்டரின் 9 சதவீத பங்குகளை வாங்கிய எலான் மஸ்க், அதன் மூலம் நிர்வாக முடிவுகளில் ஆதிக்கம் செலுத்த இயலாது என்பதால் முழு நிறுவனத்தையும் வாங்குவதாக அறிவித்தார்.

ஒரு பங்குக்கு 54 அமெரிக்க டாலர் என ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையில் 4,400 கோடி அமெரிக்க டாலர்களுக்கு எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி ஆகும். இந்த நிதியைத் திரட்ட டெஸ்லா நிறுவனத்தில் தனக்கு இருந்த 17 சதவீத பங்குகளில் 2.6 சதவீத பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் அவர் சுமார் 63 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளார். மேலும், டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை அடமானம் வைத்து சுமார் 93 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளார்.

இவ்வளவு கடன் வாங்கி ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் எலான் மஸ்க் அதனை திருப்பிச் செலுத்த என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி தானாகவே எழுகிறது. கடனை திருப்பிச் செலுத்தும் வழிகள் குறித்து எலான் மஸ்க் வங்கிகளிடன் கூறிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி, சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் கணக்குகளில் இருந்து பிற இணையதளங்களில் எம்படெட் செய்யப்படும் ட்வீட்களுக்கு கட்டணம் வசூலிக்க உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் அதிக ஊதியம் பெறும் ஊழியர்களை வேலையை விட்டு நிறுத்தவும், ஊதியக்குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட எலான் மஸ்க் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இயக்குநர்களுக்கு ஊதியத்தை நிறுத்துவதன் மூலம் ஆண்டுக்கு 3 மில்லியன் டாலர் நிதியை சேமிக்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவையெல்லாம் வங்கிகளில் எலான் மஸ்க் கூறியதாக வெளியான தகவல்கள் தான் எனினும், இன்னும் அவர் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வருவார் என்பது எலான் மஸ்க் முழுமையாக நிர்வாகப் பொறுப்பை ஏற்ற பின்னரே தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *