• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நெல்லை மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி..!

Byவிஷா

Jan 12, 2024

நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிவடைந்தது என அம்மாநகராட்சி ஆணையர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளது. இதில், அங்கு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் 44 வார்டுகளில் வெற்றி பெற்று, நெல்லை மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. இதையடுத்து, திமுக சார்பில் மேயராக பி.எம். சரவணன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. இதனால், சொந்த கட்சியின் மேயரான சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கி வந்தனர். மேலும், இரு தரப்பிலும் மாறி மாறி குற்றச்சாட்டி வந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளும் முன்வைத்தனர். இதன் காரணமாக சொந்த கட்சியிலேயே மேயர், கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனை பெரிதானது.
இதனைத்தொடர்ந்து, நெல்லை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள், மேயர் சரவணனிடம் அம்மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் கேஎன் நேரு உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும், பிரச்சனை முடிவுக்கு வரவில்லை, இதனால், சில கவுன்சிலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சூழலில் தொடர்ந்து மோதல் இருந்து வந்த நிலையில், கடந்த மாதம் நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
அதன்படி, மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் 38 பேர் கையெழுத்திட்ட தீர்மானத்தை மாநகராட்சி ஆணையர் தாக்கரேவிடம் வழங்கினர். திமுக கவுன்சிலர்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் தாக்கரே அறிவித்திருந்தார்.
இந்த சூழலில், நெல்லை மேயர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், அதில் திமுக கவுன்சிலர்களை பங்கேற்க விடாமல் செய்யும் வகையில் அவர்கள் வெளியூருக்கு அழைத்து செல்லப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த நிலையில், நெல்லை மேயருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக அம்மாநகராட்சி ஆணையர் தாக்கரே அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய நெல்லை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்..,
மேயர் பி.எம்.சரவணனுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த கவுன்சிலர்கள் வாக்கெடுப்புக்கு வரவில்லை என்பதால் தீர்மானம் தோல்வியில் முடிந்தது. நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான கூட்டத்திற்கும் கொடுக்கப்பட்ட கூடுதல் அவகாசமும் நிறைவு பெற்றது. இதனால் ஒரு வருடத்திற்கு மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடியாது எனவும் தெரிவித்தார். இதன்மூலம் சரவணனுக்கு மேயர் பதவி தப்பியது என்றே கூறலாம்.