காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மணிமங்கலம் பகுதியில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலைய எல்லையில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என தனி தனி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதனால் தாம்பரம் மாநகர காவல் நிலைய எல்லையில் மணிமங்கலம் காவல் நிலையம் சேர்க்கப்பட்டது. அதேபோல புறநகர் பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்கள் மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு புகார், மற்றும் வந்து செல்வதற்கு சிரமப்பட்டு வந்தனர். இதை தொடர்ந்து படப்பை பகுதியில் புதிய காவல் நிலையம் திறக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து படப்பையில் தற்போது தற்காலிகமாக பழைய அரசு கட்டிடத்தை புதுப்பித்து படப்பை காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான திறப்பு விழா நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலைசெல்வி மோகன், சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், காங்., மாநில தலைவர் செல்வபெருந்தகை, தாம்பரம் கமிஷனர் அபின் தினேஷ் மோதக், உள்ளிட்டோர் பங்கேற்று காவல் நிலையத்தை திறந்து வைத்தனர். புதிதாக திறக்கப்பட்டுள்ள படப்பை காவல் நிலைய எல்லையில் படப்பை, சாலமங்கலம், காவனூர், ஒரத்தூர், நாட்டரசன்பட்டு ஆகிய 23 கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் நியமிக்கும் வரை மணிமங்கலம் காவல் ஆய்வாளர் பொறுப்பு வகிப்பார் எனவும் இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள், 15 காவலர்கள் நியமனம் செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.