• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோவையில் நேபாள இளைஞர் செங்கல்லால் அடித்துக் கொலை : ஜார்க்கண்ட் வாலிபர் கைது!

BySeenu

Sep 10, 2026

கோவை அருகே பாப்பம்பட்டி பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த வாலிபர் கொடூரமான முறையில் செங்கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நபரைச் சூலூர் காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.

கோவை, பாப்பம்பட்டி நந்தினி நகர் பகுதியில் உள்ள தனியார் நிலத்தின் வெற்றுச் செங்கல் கொட்டகை ஒன்றில், வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடப்பதாகச் சூலூர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
​சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், இறந்து கிடந்தவர் பாப்பம்பட்டி பகுதியில் உள்ள பிரபல ஈ-காமர்ஸ் (E-Commerce) நிறுவனத்தின் கிடங்கில் (Warehouse) பணியாற்றி வந்த நேபாள நாட்டைச் சேர்ந்த ராஜன் எ (எ) ராமேஸ்வர் சா என்பது தெரியவந்தது.

இக்கொலை சம்பவம் குறித்துச் சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, உடன் பணி புரியும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ராஜனின் உடல் தோற்றத்தைக் குறித்து அவருடன் பணி புரியும் சக ஊழியரான ஜெகதீஷ் என்பவர் அடிக்கடி கேலி செய்து வந்ததும், இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வந்ததும் அம்பலமானது.

​கடந்த 5-ஆம் தேதி இரவு, ராஜன் அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளார். அப்போது, அவரைத் தங்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஜெகதீஷ் மற்றும் அவரது நண்பரான ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மத்தயாஸ் மல்டோ ஆகியோர் அழைத்துச் சென்று உள்ளனர்.

செங்கல் கொட்டகை அருகே சென்ற போது, உருவக்கேலி தொடர்பாக ராஜனுக்கும், ஜெகதீஷுக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ஆத்திரம் அடைந்த ஜெகதீஷ், அங்கு இருந்த செங்கல்லை எடுத்து ராஜனின் தலையில் சரமாரியாகத் தாக்கி உள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த ராஜன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்தத் தாக்குதலுக்கு மத்தயாஸ் மல்டோ முழுமையாக உடந்தையாக இருந்து உள்ளார்.

​இதை அடுத்து தலைமறைவாக முயன்ற ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மத்தயாஸ் மல்டோவைச் சூலூர் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கொலையில் தொடர்புடைய முதன்மை குற்றவாளியான ஜெகதீஷைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.