திருநெல்வேலி மாவட்டத்தில், பல கிராமங்களை இணைக்கும் பேருந்துநிலையமாக, வள்ளியூர் புதிய பேருந்துநிலையம் திகழ்ந்து வருகிறது. இப்பேருந்து நிலையத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. மேலும் இப்பேருந்து நிலையம் திருநெல்வேலி – நாகர்கோயில் இணைப்பு சாலையாகவும் விளங்கி வருகிறது.
தற்போது இப்பேருந்து நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் நவீனமயமாக்குவதற்கு, அரசு ரூ.12.13கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அதனைத்தொடர்ந்து, இப்பேருந்து நிலையத்தை நவீனமயமாக்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. அதனையொட்டி பேருந்து நிலைய வியாபாரிகளை அவர்களது கடையை காலி செய்யும்படி கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பேருந்து நிலைய வியாபாரிகள் அடிக்கல் நாட்டு விழாவிற்கு கண்டனம் தெரிவித்து பேருந்து நிலைய கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பேருந்து நிலைய வியாபாரிகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்த வேண்டிய சூழல் இருந்தது. இந்த நிலையில் தற்போது தான் இயல்பு வாழ்க்கை சீராகி வருகிறது.
இந்த வேளையில் கடைகளை இருப்பதால் கடனை அடைக்க முடியாமல் பல குடும்பங்கள் பாதிக்க நேரிடும். மேலும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் கடைகள் பராமரிப்பு என்ற பெயரில் 20 லட்ச ரூபாயை அரசு செலவழித்துள்ளது. அதுமட்டுமின்றி கட்டட தரச்சான்று 65சதவீதம் சரியாக இருப்பதாக அரசு கூறியுள்ளது என வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.