• Sun. May 5th, 2024

இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நவராத்திரி விழா.., நாளை அக்ஷராபியாசம் நிகழ்வு..,

ByKalamegam Viswanathan

Oct 23, 2023

பிரசித்தி பெற்ற மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவில் தினந்தோறும் அம்பிகைக்கு விசேஷ அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான ராணி சாஹிபா டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியார் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் இக்கோயிலில், நவராத்திரி விழாவின் முத்தாய்ப்பு நிகழ்வாக, ‘அக்ஷராபியாசம்’ என்னும் ‘அரிச்சுவடி ஆரம்பம்’ நிகழ்வு நாளை நடக்கிறது. குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு, சன்னிதியில் குழந்தைகள் நெல்மணியில் ‘அ.. ஆ..’ என எழுதி கல்வியை தொடங்குவது அவர்கள் கல்வியிலும், வாழ்விலும் சிறந்து திகழ்வர் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

கடந்த 15ஆம் தேதி தேதி இக்கோயிலில் அம்பிகைக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு நவராத்திரி விழா தொடங்கியது. தினந்தோறும் ஒவ்வொரு அலங்காரங்கள் செய்யப்பட்டன. மகிஷாசுரமர்த்தினி, அன்னபூர்ணா, ஊஞ்சல் சேவை என விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டன.

குறிப்பாக, மதுரையின் 64 திருவிளையாடல்களை நினைவூட்டும் விதமாக முருகனுக்கு வேல் கொடுத்தது, புட்டுக்காக மண் சுமந்து சிவபெருமான் பிரம்பு அடிபட்டது உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்பட்டன.

ஆலய அர்ச்சகர் எஸ் தர்மராஜ் சிவம் கூறுகையில், “எந்தச் செயலைச் செய்வதற்கும் முன்பாக சிவபூஜை செய்வது சிவனடியார்களின் வழக்கம். மதுரையம்பதி 64 திருவிளையாடல்கள் நிகழ்ந்த தலம். கைலாயத்தை இருப்பிடமாகக் கொண்ட சிவபெருமான் மதுரைக்கு வந்து மீனாட்சியை மணம் முடித்து மதுரையில் மருமகனாக அருள் அளிக்கிறார்.

மலையத்துவஜ பாண்டிய மன்னனின் மகளான மீனாட்சியை திருமணம் முடித்ததும் மணக்கோலத்தில், சிவ பூஜை செய்தார். இந்த வரலாறு நிகழ்ந்த தலம் இதுதான். கர்ப்ப கிரகத்தில் சிவலிங்கத்தின் முன்பாக மனைவி மீனாட்சி உடன் மணக்கோலத்தில் அமர்ந்து, சிவபூஜை செய்யும் வடிவத்தில் சிவபெருமான் இங்கு காட்சி அளிக்கிறார். ஆக, ஒரே சன்னதிக்குள் சிவபெருமானின் அர்ச்சாவதார ரூபம், லிங்க வடிவத்தை ஒரு சேர தரிசிக்கலாம். இத்தகைய திருக்கோலத்தைக் காண்பது அபூர்வம்.

இப்போதும் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணத்தின் போது ‘சிவபூஜை’ செய்யும் வைபவம் வெகு சிறப்பாக நடக்கிறது. இந்த பிறவியிலேயே மனிதர்களுக்கு நன்மை தருபவராக அருள் அளிப்பதால் சிவனார், ‘இம்மையிலும் நன்மை தருவார்’ என்று அழைக்கப்படுகிறார். அம்பிகை மத்தியபுரி நாயகியாக அருள்பாளிக்கும் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக அரங்கேறி வருகிறது” என்றார்.

நவராத்திரியை முன்னிட்டு 9 நாட்களும் விசேஷ கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. ஞான விஸ்ருதாவின் நாட்டிய சாஸ்திர அகாடமி, பாண்டிகலா ஸ்ரீலா நாட்டிய பள்ளி, சீதாலட்சுமி சீனிவாசன் நிருத்திய கலாகேந்திரா, ஸ்வர ராக பரதாலயா, கீர்த்தனா நிருத்திய கல்ச்சுரல், ரத்தின பிரியா ரமேஷ் செல்ல மீனாட்சி நாட்டிய கலாலயா, கலை நர்த்தனாலயா ஆகிய குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் நடந்து வருகிறது.

ராகமஞ்சரி, பிரியதர்ஷினி மற்றும் வசந்தாவின் பக்தி இன்னிசை, கலா சாதனா கலைக்கூடத்தின், சாய் ஸ்ருதியாலயா நடன நிகழ்ச்சி, கலையாலயாவின் பாட்டும் பரதமும், கலைமாமணி அமுதகலாவின் நடன நிகழ்ச்சி மற்றும் சித்ரா கணபதியின் ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

நாளை அக்டோபர் 24 விஜயதசமி அன்று அம்புபோடும் நிகழ்வுடன் கோயிலில் நவராத்திரி விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *