மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, இன்று மதிமுகவில் ஏற்கனவே இருந்த நாஞ்சில் சம்பத்தை சந்தித்துள்ளார்.
மதிமுகவில் துரை வைகோவுடன் மோதத் தொடங்கி, பின் பொதுச் செயலாளார் வைகோவால் துரோகி என குற்றம் சாட்டப்பட்ட துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவை ஓரங்கட்ட முயற்சி நடந்தது.
இருதரப்பு அறிக்கை, பேட்டி போர்களுக்கு மத்தியில் சில நாட்களுக்கு முன் மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கினார் வைகோ.
இந்நிலையில் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் விழாவை திருச்சியில் மாநாடாக நடத்துகிறார் வைகோ.
‘அதேநாளில் அண்ணா பிறந்தநாள் மாநாட்டை காஞ்சியில் மல்லை சத்யா நடத்துகிறார்.
இதற்காக முன்னாள் மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமியை சந்தித்து பேசினார் மல்லை சத்யா.
இந்த சூழலில் இன்று (ஆகஸ்டு 25) மல்லை சத்யாவும் ஏற்கனவே மதிமுகவில் இருந்து வெளியேறிய நாஞ்சில் சம்பத்தும் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு பற்றி குறிப்பிட்டுள்ள மல்லை சத்யா,
“காஞ்சியில் செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் முப்பெரும் விழாவில் சிறப்புரை ஆற்ற நாவுக்கரசர் அண்ணன் நாஞ்சில் சம்பத் அவர்களை அழைத்து மகிழ்ந்தேன்.
அன்பின் தோழமைகளே காஞ்சியில் நடைபெறவுள்ள பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில் தமிழ்க் கூறும் நல்லுலகின் ஆகச் சிறந்த நாவலர்கள் பேராசிரியர் அய்யா அப்துல் காதர், 577 நாட்கள் பொடா சட்டத்தில் சிறை பட்டு இருந்த தியாக வேங்கை திருப்பரங்குன்றத்து தென்றல் வழக்கறிஞர் பொடா அழகு சுந்தரம் உள்ளிட்ட பலர் உரையாற்ற உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.