• Tue. Jun 24th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

நாங்குநேரி சம்பவம் : அண்ணாமலை காட்டம்..!

Byவிஷா

Aug 12, 2023

நாங்குநேரியில் பள்ளி மாணவர் சக மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்டுள்ள நிலையில், திமுக விதைத்த விஷவிதை இன்று மரமாக மாறி இருக்கிறது. அதை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை காட்டமாக தெரிவித்துள்ளார்..
இதுகுறித்து தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..,
நாங்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே ஜாதிய பிரச்சனைகள் காரணமாக, 12 வது வகுப்பு படிக்கும் பட்டியல் சமூக மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி இருவரும், சக பள்ளி மாணவர்களால் வெட்டப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. பள்ளி மாணவர்களிடையே ஜாதிய வேறுபாடுகள் அதிகரித்து வருவதும், ஆயுதங்கள் கொண்டு தாக்குவதும் எதிர்கால சமூகத்தை நினைத்து அச்சம் கொள்ள வைக்கிறது.
மாணவர் சின்னதுரை, நன்றாக படிக்கும் மாணவர் என்றும், ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெற்றவர் என்றும் அறிகிறேன். சிறந்த மாணவராக, வருங்காலத்தில், சமூகத்தில் உயர்ந்த பொறுப்பில் வரும் வாய்ப்புள்ள மாணவர் ஒருவர், ஜாதிய வன்முறையால் முடக்கப்படுவதை சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீதும், இதன் பின்னணியில் இருப்பவர்கள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன். அற்ப அரசியல் லாபங்களுக்காக வேறு வேறு சமூகங்கள் இடையே ஜாதி வெறியை தூண்டி, அதன் மூலம் ஆண்டாண்டு காலமாக பலனடைந்து வரும் கட்சி, திமுக என்பதை அனைவரும் அறிவர்.

இந்த சம்பவத்திலும் திமுக கட்சி பொறுப்பில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்றும், அவர்கள் காவல்துறையை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளி வருகின்றன. உதட்டளவில் சமூக நீதிப் பேசி, தேர்தல் வாக்குகளுக்காக சமூகத்தில் ஜாதிய வேற்றுமையை வளர்த்துக் கொண்டிருக்கும் திமுகவின் செயல்பாடுகளின் விளைவு தான், இது போன்ற கொடூர சம்பவங்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
திமுகவின் ஆரம்ப கால உறுப்பினராகவும், மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரை அவர்களின் அமைச்சரவையில் அமைச்சராக பதவியில் இருந்த, மறைந்த சத்தியவாணி முத்து அவர்கள், திமுக தலைமை ஜாதிய பாகுபாடு காட்டுகிறது என்ற குற்றச்சாட்டு இன்றுவரையில் அப்படியே தொடர்கிறது என்பது அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. திமுக கட்சியிலும், பொதுமக்கள் மத்தியிலும், திமுக அமைச்சர்கள் பட்டியல் சமூக மக்களை அவமானப்படுத்தும் விதமாக நடத்துவது, செய்திகளில் வந்து கொண்டு தான் இருக்கிறது.
திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்களே. பட்டியல் சமூக உள்ளாட்சி உறுப்பினர் ஒருவரை ஜாதியின் பெயரைச் சொல்லி அழைத்த அமைச்சர் பொன்முடி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பட்டியல் சமூக ஊராட்சி மன்ற பெண் தலைவரை, தேசியக்கொடி ஏற்ற விடாமல் தடுத்தும் அமர்வதற்கு நாற்காலி கூட கொடுக்காமல் அவமானப்படுத்திய உங்கள் கட்சியினர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நீதிபதியானது நாங்கள் போட்ட பிச்சை என்று சொன்ன ஆர்.எஸ் பாரதி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த உங்கள் கட்சி பாராளுமன்ற உறுப்பினருக்கு கூட நாற்காலி கொடுக்காமல் நிற்க வைத்த உங்கள் அமைச்சர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே. வேங்கை வயல் சம்பவம் நடந்து 200 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதுவரை நீங்கள் குற்றவாளியை கைது செய்ய எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. மத்திய அரசு, பட்டியல் சமூக மக்களின் மேம்பாட்டுக்காக ஆண்டு தோறும் வழங்கும் நிதியை செலவிடாமல் திருப்பி அனுப்பி வருகிறீர்கள். இதுவரை பத்தாயிரம் கோடிக்கும் அதிகமான நிதியை திருப்பி அனுப்பி இருக்கிறீர்கள். இன்னும் ஒரு படி மேலாக பட்டியல் சமூக மக்களுக்கு பயன்படுத்த வேண்டிய நிதியை மற்ற திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்து கொண்டிருக்கிறீர்கள். பட்டியல் சமூக மக்களுக்கான அடிப்படை வசதிகளோ, பட்டியல் சமூக மாணவர்களுக்கு, சரியான பள்ளி வசதிகளோ, விடுதி வசதிகளோ அல்லது வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியல் சமூக மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நஷ்ட ஈடு தொகையோ, அந்த நிதியிலிருந்து வழங்க உங்களுக்கு மனம் வரவில்லை. யாரை ஏமாற்ற இந்த சமூக நீதி நாடகமாடி கொண்டிருக்கிறீர்கள்? தேர்தல் நேரத்தில் வெறும் ஃபோட்டோ எடுத்து ஏமாற்ற மட்டும் தான் உங்களுக்கு பட்டியல் சமூக மக்கள் மீது அக்கறை வருமா?
மாணவர் சின்னதுரையின் கல்விப் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருக்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ். வரவேற்கிறேன். ஆனால் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டியது அல்லவா மாநில அரசின் கடமை? அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் இது போன்ற சம்பவங்கள் நடப்பது ஏன் என்பதை விளக்குவாரா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ்? திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடிகிறது என்றால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் ஏன் தடுக்க முடியவில்லை? அரசு பள்ளி ஆசிரியர்களின் கைகளை கட்டிப்போட்டு விட்டு, ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்கள் தடம் புரள்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர். பத்தாயிரம் சிதிலமடைந்த அரசு பள்ளி கட்டிடங்களுக்கு மாற்றாக புதிய கட்டிடங்கள் கட்டுவோம் என்று சொல்லி ஆண்டு இரண்டு ஆகிறது. ஏழை மாணவர்கள் மீது அக்கறை இருந்தால்தானே செயல்படுத்தத் தோன்றும்?
திமுக ஆட்சியின் அவலங்கள் அனைத்திற்கும் யார் மீதோ பழி போட்டு மடை மாற்றிக் கொண்டிருக்கும் அண்ணன் திரு. தொல் திருமாவளவன் அவர்களே. உடைந்த பழைய நாற்காலி தனிப்பட்ட முறையில் உங்களுக்கு வேண்டுமானால் போதுமான சமூக நீதியாக இருக்கலாம். ஆனால் உங்களையும் தலைவர் என்று பின்தொடரும் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் இதன் மூலம் நீங்கள் கொடுக்கும் செய்தி என்ன? இப்படி திமுகவின் சமூக நீதிக்கு எதிரான செயல்கள் அனைத்தையும் மடை மாற்றுவதால் உங்களுக்கு கிடைக்கும் பலன் தான் என்ன? ஏன் உங்கள் கட்சியினரையும், மக்களையும் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்? நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் சம்பவங்களுக்கு எல்லாம் உச்சஸ்தாயில் குரல் கொடுக்கும் நீங்கள், தமிழகத்தில் தோழமை சுட்டக் கூட பேச்சு வராமல் முடங்கிப் போய் விட்டீர்களே. உங்கள் தனிப்பட்ட நலனுக்காக, தமிழகத்தின் ஒரு பெரும் சமூகத்தை இன்னும் எத்தனை நாட்களுக்கு பலி கொடுக்கப் போகிறீர்கள்?
திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே. வெறுப்பில் பிறந்து 70 ஆண்டுகளாக தமிழகத்தில் வெறுப்பை மட்டுமே விதைத்து கொண்டிருக்கும் உங்கள் கட்சி, தற்போது விதைத்து கொண்டிருப்பது சமூகத்தை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் கொண்டிருக்கும் சாதிய பாகுபாடு என்னும் விஷ விதை உங்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் வளர்த்து வரும் இந்த விஷச்செடி எம் தமிழக மக்களால் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. என்றும் தேசப்பணியில் கே. அண்ணாமலை” என தெரிவித்துள்ளார்.