• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆழமாக சிந்தித்து பேசக்கூடியவர் நல்லக்கண்ணு: மு.க.ஸ்டாலின் புகழாரம்

ByP.Kavitha Kumar

Dec 26, 2024

எல்லாருக்கும் எல்லாம், சமூகநீதி – சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என பாடுபடுபவர் நல்லக்கண்ணு. அமைதியாக – ஆழமாக சிந்தித்து பேசக்கூடிவர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், சுதந்திர போராட்ட வீரர் ஆர்.நல்லக்கண்ணுவின் 100-வது
பிறந்தநாள் விழா சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் இன்று நடைபெற்றது. அப்போது ஆர்.நல்லக்கண்ணு கட்சி கொடி ஏற்றினார். இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு பொன்னாடை அணிவித்து, திருவள்ளுவர் சிலையை பரிசாக வழங்கி கவுரவித்தார்.

இதன்பின்னர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நல்லக்கண்ணுவை வாழ்த்த வரவில்லை; அவரிடம் வாழ்த்து பெற வந்திருக்கிறேன். . பொதுவுடைமை இயக்கத்துக்கும் நூற்றாண்டு. நல்லக்கண்ணுவுக்கும் நூற்றாண்டு, இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைக்கவில்லை. எல்லாருக்கும் எல்லாம், சமூகநீதி – சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என பாடுபடுபவர் நல்லக்கண்ணு. அமைதியாக – ஆழமாக சிந்தித்து பேசக்கூடிவர். திராவிட மாடல் ஆட்சிக்கு பக்கபலமாக விளங்குபவர். திமுக ஆட்சி நிறைவேற்றும் திட்டங்களுக்கும் உறுதுணையாக விளங்கி கொண்டிருக்கிறார்.

எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு வழிகாட்டிட வேண்டும் என நல்லகண்ணு அய்யாவைக் கேட்டுக் கொள்கிறேன். 2026 சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறும் அளவுக்கு திமுக கூட்டணி அமைந்திருக்கிறது. கொள்கை கூட்டணியாக மட்டுமல்ல; மதச்சார்பின்மை
கூட்டணி, நிரந்தர கூட்டணியாக இருக்கிறோம் என்றார்.

இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, நல்லக்கண்ணு பெயரை சூட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் முதுபெரும் பொதுவுடைமைச் சிந்தனையாளரும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவருமான தோழர் ஆர். நல்லக்கண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. நமது மாநிலத்திற்கும், தமிழ் மக்களுக்கும் நல்லக்கண்ணு ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும்விதமாக, தமிழ்நாடு அரசு 2022-ம் ஆண்டு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கிச் சிறப்பித்தது. இன்று அவரது நூறாவது பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தியபோது, அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று, அவர் பிறந்த ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை சி.டி.ஸ்கேன் வசதியுடன் தரம் உயர்த்தி, கூடுதல் வசதிகளுடன் புதிய மருத்துவமனைக் கட்டடம் அமைத்திட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியையே எப்போதும் தனது தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்னலமற்ற தகைசால் தமிழர் தோழர் இரா. நல்லக்கண்ணு அவர்களின் பெருமையைப் போற்றும்வகையில், ஸ்ரீவைகுண்டத்தில் அமையவிருக்கும் புதிய மருத்துவமனைக் கட்டடத்திற்கு “தோழர் நல்லகண்ணு நூற்றாண்டுக் கட்டடம்” எனப் பெயரிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளா என்று அதில் கூறப்பட்டுள்ளது.