களமிறங்கிய நயினார் பாலாஜி
தேசிய ஜனநாயக கூட்டணியில் சேரும் கட்சிகள் தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜகவுக்குள் கடுமையான உள்கட்சி முரண்பாடு ஏற்பட்டிருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ்ஐ அடுத்து டி டி வி தினகரன் அறிவித்தார்.
முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் நிலையில் இந்த கூட்டணியில் தன்னால் தொடர இயலாது என டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்.
மேலும் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியை பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சரியாக கையாளவில்லை என்றும் குற்றம் சாட்டி இருந்தார் தினகரன்.
அதே நேரம் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து பாராட்டியும் வந்தார் தினகரன்.
இந்த நிலையில் டிடிவி தினகரன் சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர நான் வற்புறுத்துவேன் என்று அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
அதன்படியே கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி இரவு தனது பாதுகாப்பு வாகனங்களை தவிர்த்து விட்டு சென்னை அடையாறில் இருக்கும் டிடிவி தினகரன் வீட்டுக்கு, தனது வழக்கமான கார் அல்லாமல் வேறு ஒரு காரில் சென்றார் அண்ணாமலை. தினகரனை சந்தித்து ஒரு மணி நேரம் பேச்சு நடத்தினார். அவர் வீட்டிலேயே இரவு உணவு சாப்பிட்டு விட்டு திரும்பினார் அண்ணாமலை.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தினகரனை சந்தித்து மீண்டும் கூட்டணிக்கு அழைத்ததாக அண்ணாமலை தெரிவித்தார். அண்ணாமலை உடைய நட்பை மதிப்பதாகவும் ஆனால் மீண்டும் கூட்டணிக்கு வர முடியாது எனவும் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் இருக்கும்போது அண்ணாமலை ரகசியமாக தினகரனை அரசியல் ரீதியாக சந்திக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்கள் நயினார் நாகேந்திரனிடம், ” தமிழக பாஜகவுக்கு நீங்கள் தலைவரா அண்ணாமலை தலைவரா?” என்று கேட்க டென்ஷனான நயினார் நாகேந்திரன்,
“இதுபோலவெல்லாம் கேட்கக்கூடாது. அவர் நட்பு ரீதியாக சந்தித்திருக்கிறார். எனக்கும் எல்லா கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள்” என்று பதிலளித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்ததை அண்ணாமலை வெளிப்படையாக வரவேற்றாலும் அவர் மனதளவில் அதை ஏற்கவே இல்லை.
மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என அமித்ஷா கலந்து கொண்ட பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை பேசினாலும்… தொடர்ந்து எடப்பாடிக்கு எதிரான நடவடிக்கைகளிலேயே அவர் ஈடுபட்டு வருகிறார்.
அதில் ஒன்றுதான் மாநில தலைவரிடம் எவ்விதமான ஆலோசனையும் செய்யாமல் தன்னிச்சையாக டிடிவி தினகரனை சந்தித்தது.
இதனால் கோபமான நயினார் நாகேந்திரன் தரப்பு, அண்ணாமலைக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகிறது.
இதில் பாஜக மாநில தலைவர் இருக்கும் நயினார் நாகேந்திரன் நேரடியாக களமிறங்கவில்லை. அவரது மகன் நயினார் பாலாஜி தான் முக்கியமான ஊடக பிரமுகர்களை சந்தித்து அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து செய்திகள் வெளி வருவதற்கும் முயற்சிகள் எடுத்து வருகிறார்.
குறிப்பாக அண்ணாமலை மீது டெல்லி பாஜக தலைமை கடுமையான கோபத்தில் இருக்கிறது. அண்ணாமலையின் பினாமிகள், பினாமி நிறுவனங்கள் தொடர்பான பட்டியல் எடுக்கப்பட்டுவிட்டது விரைவில் அண்ணாமலை மீது ஆக்சன் பாயும் என பிரபல ஊடக ஒருவர் அந்த நிறுவனங்களை பட்டியல் போட்டு செய்தி வெளியிட்டார்.
இந்த நிறுவனங்களின் விவரங்களை துல்லியமாக எடுத்துக் கொடுத்தவரே நயினார் பாலாஜி தான் என்கிறார்கள்.
இதை அறிந்து கொண்ட அண்ணாமலை தரப்பு… நயினார் நாகேந்திரனின் பிசினஸ் தொடர்புகள் அவருடைய சொத்து விவரங்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறவினர்களின் நிறுவன விவரங்கள் உள்ளிட்டவற்றை இப்போது தீவிரமாக சேகரித்து வருகிறார்கள்.
விரைவில் அண்ணாமலை அடுத்த குண்டை போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்ணாமலைக்கும் நயினார் நாகேந்திரனுக்கும் இடையில் இந்த மோதல் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஏற்பட்டது என்கிறார்கள்.
இதுகுறித்து பாஜக வட்டாரத்தில் விசாரித்த போது, “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார் நயினார் நாகேந்திரன். அப்போது சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லை சென்ற ரயிலில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. இந்த பணம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தான் எடுத்துச் செல்லப்படுகிறது என சர்ச்சை கிளம்பியது.
ஆளும் திமுகவே அப்போது இதில் பெரிய அக்கறை காட்டாத நிலையில் அன்றைய மாநில தலைவராக இருந்த அண்ணாமலை தான் இந்த விவகாரத்தை விஸ்வரூபம் ஆக்கிவிட்டார் என்று நயினார் நாகேந்திரன் தரப்பு கடுமையான கோபமடைந்தது.
அதனால்தான் நயினார் நாகேந்திரன் மாநில தலைவராக பதவி ஏற்றதும் அண்ணாமலை ஆதரவாளர்கள் முற்று முழுதாக ஓரங்கட்டப்பட்டனர்.
அந்த நான்கு கோடி ரூபாய்க்கு எதிர்வினையாக தான் இப்போது அண்ணாமலை என்பது கோடி ரூபாய்க்கு வாங்கிய சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் நயினார் நாகேந்திரன் தரப்பினரால் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த போட்டி போகப்போக என்ன ஆகுமோ?” என்கிறார்கள் பாஜக நிர்வாகிகளே.
