திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கம். பங்குனி தேரோட்டத்தை காண வந்த முருக பக்தர்களுக்கு, இஸ்லாமியர்கள் சர்பத் கொடுத்து வெயிலில் தாகத்தை தணித்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில் நேற்று பங்குனி திருவிழா முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம், இன்று தேரோட்டம் நடைபெற்றது.
சுப்பிரமணியசுவாமி மற்றும் தெய்வானை தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

தேரோட்டத்தை காண வந்த பக்தர்கள் வெயிலில் வாட்டி வதங்கிய நிலையில், பக்தர்களின் தாகத்தை தணிக்கும் விதமாக திருப்பரங்குன்றம் கோவில் அருகே உள்ள ஹஜ்ரத் சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசல் உறுப்பினர்கள், முருக பக்தர்களுக்கு சர்பத், நீர், மோர் கொடுத்து பக்தர்களின் தாகத்தை தனித்தனர்.
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, இந்து அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், திருப்பரங்குன்றம் பள்ளிவாசல் உறுப்பினர்கள், தேரோட்டத்தை காண வந்த பக்தர்களுக்கு சர்பத் கொடுத்து தாகத்தை தணித்தது சமூக நல்லிணக்கத்தை போற்றும் விதமாக அமைந்துள்ளது.
