• Fri. Apr 19th, 2024

ராவண கோட்டம் இசை
வெளியீட்டு விழாவும் – சினிமா பத்திரிகையாளர்கள் சங்கமும்

“சிவனை வழிபடுகிறவனை அழைத்து பெருமாள் புகழை பரப்புமாறு கூறினால் எப்படி செய்வான் என்கிற அடிப்படை புரிதல்கூட இல்லாமல் வேலை செய்பவர்களை என்னவென்று கூறுவது..?” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஒருவர்.

கடந்த பல நாட்களாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியிருக்கும் ‘ராவண கோட்டம்’ இசை வெளியீட்டு விழாவுக்கு சென்னையில் இருந்து துபாய்க்கு ‘பத்திரிகையாளர்கள்’ என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்டவர்கள் பற்றி வெவ்வேறு தகவல்கள் உலா வருகின்றன.

இது பற்றி நாம் ஏற்கனவே ”ராவண கோட்டம் தயாரிப்பாளர் ஏமாற்றப்படுகிறாரா?” என்று எழுதியிருந்ததைப் படித்துவிட்டு நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஒருவர், “தவறு பத்திரிகையாளர்களிடம்தான் இருக்கிறது. அவர்கள் சரியாக இருந்தால் PRO-க்கள் ஒழுங்குக்கு வருவார்கள்.

முன்பெல்லாம் படத்திற்கான, அல்லது நட்சத்திரங்களுக்கான, அல்லது திரைப்பட விழாக்களுக்கு பத்திரிகையாளர்களை அழைப்பதில் நேர்மையும், ஒழுங்கும் கடைப்பிடிக்கப்பட்டது.

அச்சு ஊடகங்கள் மட்டும், அல்லது முன்னணி இணையதளங்கள், தொலைக்காட்சிகள் என பட்டியலிடப்படும் இவர்களை அழைப்பதால் அந்த பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் செய்தி எந்தளவு ரீச் ஆகும் என்றெல்லாம் திட்டமிட்டு அழைக்கப்படுவார்கள்.

அப்படிப்பட்ட நடைமுறைகள் இந்த ‘ராவண கோட்டம்’ படத்தின் விழாவுக்கு பத்திரிகையாளர்களை அழைத்து செல்ல கடைப்பிடிக்கப்பட்டதாக தெரியவில்லை.

பொதுவாக தமிழ் சினிமா செய்திகளை வெளியிடக்கூடிய முன்னணி ஊடகங்களின் செய்தியாளர்கள் அழைத்து செல்லப்படவில்லை என கூறப்படுகிறது. அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கிறபோது அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும், சின்ன வீடு, நண்பர்கள், உறவினர்கள் பயனடையுமாறு செயல்படுவார்கள்.

அதனை எதிர்த்து கேட்பவர்களையும் விஷயம் வெளியில் லீக் ஆகக் கூடாது என்பதற்காக அந்தப் பயனாளிகள் பட்டியலில் இணைத்துக் கொள்வார்கள். அப்படித்தான் எப்போதோ பத்திரிகைகளில் பணியாற்றியதை கூறி “நான் யார் தெரியுமா..?” என சவுண்டு கொடுத்தவர்களிடம் இப்போது எந்த ஊடகம் என்பதைக்கூட கேட்காமல் பம்மி, பதுங்கி, நடுங்கிப் போய் “நீங்களும் வாங்க” என பட்டியலில் இணைக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகம் என்கின்றனர். மொத்தத்தில் நம்பி பொறுப்பை ஒப்படைத்த தயாரிப்பாளர் ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்கின்றனர்.

இது போன்ற இசை வெளியீட்டு நிகழ்வுகளின் செய்திகளை அச்சு ஊடகங்களும், இணையதளங்கள் மட்டுமே உடனுக்குடன் வெளியிடும். அழைத்து செல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையோர் இது போன்ற செய்திகளை வெளியிடும் ஊடக செய்தியாளர்கள் இல்லை என்கின்றனர். அதனால்தான் சொன்னேன், “சிவனை குல தெய்வமாக வழிபடுகிறவன் பெருமாள் புகழ் எப்படி பாடுவான்” என்று.!

சர்ச்சைக்குரிய சங்கதிகளை, திரைப்பட விமர்சனங்களை பேசுவதை பிரதானமாக கொண்ட வலைத்தள செய்தியாளர்கள், எப்படி இசை வெளியீட்டு செய்தியை வெளியிடுவார்கள். அவர்களை குறை கூற முடியாது. அழைத்து செல்பவர்களுக்கு தெளிவு இருக்க வேண்டுமல்லவா..?

இது போன்ற அவுட்டோர் பயணங்கள் அதிலும் வெளிநாட்டில் நடைபெறும் சினிமா நிகழ்ச்சிக்கு தங்கள் நிறுவனத்தின் சார்பில் செய்தியாளராக செல்வதற்கு அந்த நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும். சர்வதேச அளவில் செய்தியாளர்களை கொண்ட ஊடகங்கள் இது போன்ற பயணங்களுக்கு அனுமதி வழங்குவது இல்லை.

தங்களது நிறுவனத்தின் சார்பில் அந்த நாட்டில் இருப்பவர்களை கலந்து கொள்ள சொல்லி விடுவார்கள்.

அப்படியென்றால் இந்த ‘ராவண கோட்டம்’ பட இசை வெளியீட்டு விழாவிற்கு சென்ற பத்திரிகையாளர்கள் பெரும்பாலும் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கு தெரியாமல் சென்று வந்திருக்கிறார்கள் போலும்.!

முறைப்படி அனுமதி பெற்றிருந்தால் ‘ராவண கோட்டம்’ இசை வெளியீட்டு விழா செய்தி, சென்றவர்கள் பணிபுரியும் ஊடகங்களில் இந்நேரம் வெளியாகியிருக்கும். அப்படி எதுவும் வரவில்லை.இனிமேல்தான் நிறுவனங்கள் விசாரணையை தொடங்க கூடும். எத்தனை பேர் வேலையை இழக்கப் போகிறார்கள் என்பது விரைவில் தெரியும்.சினிமா பத்திரிகையாளர்களுக்கு என இங்கு சங்கங்களும் இருக்கின்றன. இந்த சங்க நிர்வாகிகள் “எந்த அடிப்படையில் பத்திரிகையாளர்களை தேர்வு செய்கிறீர்கள்?” என கேட்டிருக்க வேண்டும்.அப்படி கேட்டால் நம்மை அழைக்காமல் விட்டு விடுவார்களோ என எண்ணி தன்னை மட்டும் அழைத்தால் போதும் என்று அமைதியாகி பட்டியலில் இடம் பிடித்தவர்களும் உண்டு.சங்கம் என்பது உரிமைக்கானது. உறுப்பினர்களின் கௌரவத்தை காக்க வேண்டும். அப்படி எந்த நடவடிக்கையிலும் இங்கு இருக்கும் சங்கங்கள் செயல்பட்டதாக தெரியவில்லை.

பத்திரிகையாளர் சந்திப்பு, பட காட்சிகளுக்கு சரியாக என நேரம் குறிப்பிட்டு தகவல் அனுப்புவார்கள் PRO-க்கள். எந்த நிகழ்ச்சியும் குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கப்படுவதில்லை. புதிய படங்கள் அதிகமாக வெளியாகும்போது ஒரே நாளில் மூன்று படங்களை தொடர்ச்சியாக திரையிடும் நடைமுறையை மாற்றவோ, ஒழுங்குபடுத்தவோ சினிமா பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள் குறைந்தபட்ச முயற்சியைக்கூட எடுத்ததில்லை.காரணம், PRO-க்களை நம்பி பிழைப்பு நடத்துபவர்கள் எப்படி அந்த முயற்சியை செய்ய முடியும்..? பத்திரிகையாளர் சந்திப்புகளை தொடர்ந்து சில பத்திரிகை தொடர்பாளர்கள், முதலாளி நாட்டாமைத்தனத்துடன் பத்திரிகையாளர்களை நடத்துவது தவறு என்பதை எப்போதாவது தடுக்கவோ, சரி செய்யவோ முயற்சித்தது உண்டா…? என்றால் இல்லை என்றுதான் கூற முடியும்.

தலைமையின் வீட்டுக்கே கேட்பது சென்று விடுவதால் தங்கள் சங்க உறுப்பினர்களின் கௌரவத்தை பற்றி சங்கத் தலைவர்களும் கவலைப்படுவதில்லை. அதனால்தான் பத்திரிகையாளர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறேன்.வருடத்திற்கு இரண்டு முறை அரிசியும், பலசரக்கு, பட்டாசுகள் வழங்குவதா சங்கங்களின் வேலை.. இது போன்ற இலவச பொருட்களின் மொத்த மதிப்பு அதிகப்பட்சமாக 5000 ரூபாயை தண்டாது.இதனை வழங்குவதற்கு தயாரிப்பாளர்களிடமும், நட்சத்திரங்களிடமும் கையேந்துகிறபோது பத்திரிகையாளர்களின் கௌரவம் காற்றில் பறக்கிறது. “இதற்குகூட வழியில்லாமலா நாம் இருக்கிறோம்..?” என்பதை பத்திரிகையாளர்கள் சிந்திக்க வேண்டும்.சில தனி நபர்கள் பயனடைய இது போன்ற சங்கங்கள் காலம், காலமாக இங்கு செயல்பட்டு வருகின்றன. தன் உறுப்பினர்கள் தவிர்க்கப்படுவதால் தன்னை அழைத்தபோதும் வர மறுத்த சினிமா சங்க நிர்வாகியும் இங்கு இருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.

பத்திரிகையாளர்கள் தங்களை மாற்றிக் கொள்வதும், ஒழுங்குபடுத்திக் கொள்வதும் காலத்தின் கட்டாயம். PRO-க்கள் மூலம் வேலை வாய்ப்பும், வருமானமும் பெறுபவர்கள் சங்கத் தலைமையில் இருப்பது தவறானது. பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக யாராலும் எப்போதும் இருக்க முடியாது..” என்று நீட்டமாக சொல்லி முடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *