3 மாதங்களுக்கு முன்பு கோவை மாநகர காவல்துறையினர் காவலர்களின் உடல் வலிமையை மேம்படுத்த “48 நாட்கள் சவால்” என்ற ஒரு முயற்சியை முன்னெடுத்தனர். இந்த சவாலில் தினமும் 2 கிமீ தூரம் என 48 நாட்கள் தொடர்ந்து ஓட வேண்டும் என்பதாகும். இதில் 1250 பேர் பங்கேற்ற நிலையில் 750 க்கும் மேற்பட்டோர் முழுமையாக அதனை முடித்துள்ளனர். அதிலும் சிலர் தினமும் 2 கிமீ தூரத்திற்கு மேலும் ஓடியுள்ளனர். இந்நிலையில் இந்த சவாலை சிறப்பாக செய்து முடித்த முதல் 20 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்ட 20 காவலர்களுக்கு சான்றிதழ்கள் பதக்கங்கள் வழங்கி கெளரவித்தார். மேலும் இதில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டு இந்த சவால் எப்படி இருந்ததென பங்கேற்றவர்களிடம் கேட்டறிந்து இதனை தொடர்ந்து செய்து உடலை ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.






