• Fri. Apr 26th, 2024

திருவள்ளூரில் ரூ.1,200 கோடி முதலீட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா புரிந்துணர்வு ஒப்பந்தம் – முதல்வர் முன்னிலையில் கையெழுத்து!..

Byமதி

Oct 13, 2021

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், நேஷனல் ஹைவே லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை நிறுவனம் மற்றும் சென்னை துறைமுகம் ஆகியவை இணைந்து, பொது மற்றும் தனியார் பங்களிப்புடன், திருவள்ளூர் மாவட்டம், மப்பேட்டில் ரூ.1,200 கோடி முதலீட்டில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவை தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

காணொலி காட்சி மூலம் நடந்த நிகழ்சியில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் டெல்லியில் இருந்த மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை மந்திரி சர்பானந்த சோனோவால் மற்றும் மத்திய சாலை போக்குவரத்து இணை மந்திரி ஜென்ரல் வி.கே.சிங் ஆகியோர் முன்னிலையிலும் கையெழுத்தானது.

இந்நிகழ்வில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் : தமிழக தொழில் துறை வரலாற்றில் இது ஒரு முக்கியமான நாள் ஆகும். தமிழ்நாடு அரசுடன் இணைந்து பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவை மத்திய அரசு தமிழ்நாட்டில் தொடங்குவது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டில் அமையும் முதலாவது பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவாக இது அமைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 158 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,200 கோடி திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது.

பெரிய தொழிற்சாலைகள் திரளாக அமைந்துள்ள திருபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம் மற்றும் ஒரகடம் ஆகிய பகுதிகளுக்கு மிக அருகில் இப்பூங்கா அமையப்போகிறது. இங்கிருந்து, சென்னை விமான நிலையம், சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகம் ஆகியவற்றை இணைக்க இது வழிவகை செய்கிறது.

ரெயில் மற்றும் சாலை இணைப்புகளுடன் சரக்கு முனையம், சேமிப்பு கிடங்கு, குளிர்பதன சேமிப்பு கிடங்கு, எந்திரங்கள் மூலம் சரக்குகளைக் கையாளுதல், மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளான சுங்க அனுமதி பெறுதல், சோதனை வசதிகள் போன்ற உலகத்தரம் வாய்ந்த வசதிகள் அனைத்தும் இப்பூங்காவில் அமைக்கப்பட இருப்பதை அறிந்து மகிழ்கிறேன்.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், சரக்கு போக்குவரத்து செலவு கணிசமான அளவில் குறையும் என்பது. இந்த புதுமையான முயற்சியின் காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

தமிழ்நாட்டில் சரக்கு போக்குவரத்து துறைக்கு உதவ வேண்டும் என்று மத்திய மந்திரிக்கு சில கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்டு வரும் பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை, திருபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் முடிவடையுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. சரக்கு போக்குவரத்தை துரிதப்படுத்தவும், போக்குவரத்து செலவைக் குறைக்கவும், இந்த விரைவுச் சாலையை, சென்னை சர்வதேச விமான நிலையம் வரை நீட்டிக்க வேண்டும்.

கோயம்புத்தூர் மற்றும் தூத்துக்குடியில் இதுபோன்ற பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும். தற்போது அமைய உள்ள பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காவில், ரெயில்வே துறையின் பங்களிப்பையும் பெற்றுத்தர வேண்டும் என மு.க.ஸ்டாலின் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *