• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி -சுடர் ஓட்டத்தை மோடி துவக்கி வைக்கிறார்

ByA.Tamilselvan

Jun 12, 2022

சென்னையில் நடைபெற உள்ள செஸ்ஓலிம்பியாட் போட்டியை முன்னிட்டு 19-ந்தேதி டெல்லியில் சுடர்ஓட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக தமிழ் நாட்டில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டிகள் நடக்கிறது. இதற்கிடையே போட்டியையொட்டி சர்வதேச செஸ் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து செஸ் ஒலிம்பியாட் சுடர் ஓட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இனி ஒவ்வொரு முறையும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதற்கு முன்பு ஒலிம்பியாட் சுடர் ஓட்டம் நடைபெறும்.
இந்த சுடர் ஓட்டம் செஸ் உருவான இந்தியாவில் இருந்து தொடங்கி போட்டி நடைபெறும் நகரத்தை அடைவதற்கு முன்பு அனைத்து கண்டங்களுக்கும் பயணிக்கும். இந்த முறை நேரமின்மை காரணமாக சுடர் ஓட்டம் இந்தியாவில் மட்டும் நடைபெறும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்து இருந்தது. சுடர் பயணிக்கும் பாதை மற்றும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான சுடர் ஓட்டம் வருகிற 19-ந்தேதி டெல்லியில் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. செஸ் ஒலிம்பியாட் சுடர் ஓட்டத்தை 19-ந்தேதி மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த சுடர் ஓட்டத்தில் பங்கேற்க வருமாறு தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக் ஞானந்தா, சர்வதேச மாஸ்டர் ஆர்.வை‌ஷாலி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. போட்டி அமைப்பு குழு இயக்குனர் பரத்சிங் சவுகான் இந்த சுற்றறிக்கையை அனுப்பி உள்ளார். இந்த சுடர் ஓட்டம் முக்கிய நகரங்களுக்கு பயணம் செய்து இறுதியாக போட்டி நடைபெறும் மாமல்லபுரத்துக்கு வந்தடையும்.