மத்திய அரசுக்கு எதிராக ஏதாவது ஒரு வகையில் ஒரு தீர்மானத்தையோ அல்லது ஏதாவது ஒரு பிரகடனத்தையோ கொண்டுவந்து மக்களை திசைத்திருப்ப திமுக அரசு முயற்சி செய்வதாக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார். இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகளான அதிமுக, பாமக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி ஆகியவை ஆதரவு அளித்த நிலையில், பாஜக எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினர். இதன் பின் சட்டப்பேரவை வளாகத்தில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “திமுக அரசு ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாக கணக்குகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் தமிழக மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதையும், அதை தீர்ப்பதற்கு கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, மத்திய அரசுக்கு எதிராக ஏதாவது ஒரு வகையில் ஒரு தீர்மானத்தையோ அல்லது ஏதாவது ஒரு பிரகடனத்தையோ கொண்டுவந்து மக்களை திசைத்திருப்ப முயற்சி செய்கிறார்கள். அதற்கு இன்னுமொரு சாட்சியாக இந்த தீர்மானத்தை நாங்கள் பார்க்கிறோம்.
இந்த நாட்டில் இருக்கக்கூடிய இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து மக்களுக்கும் அரசியலமைப்புச் சட்டம் சமமான உரிமைகளை வழங்கியிருக்கிறது. ஒரு மதத்தைப் பின்பற்றுவதற்கும், வழிபாடு நடத்துவதற்கும் எந்தவிதமான பிரச்சினையும் கிடையாது. சட்டம் அதை முழுமையாக அனுமதிக்கிறது. மத்திய அரசு முழுமையாக அதைப் பாதுகாக்கிறது. ஆனால், இந்து மக்களுக்காக அவர்கள் நிர்வாகம் செய்கின்ற கோயில்களுக்கு எல்லாம் தனியாக ஒரு அமைச்சரை நியமித்துவிட்டு, மத சுந்திரம் பற்றி எங்களுக்கு பாடம் எடுக்கிறார் முதல்வர்.
இந்த தீர்மானத்தை பாஜக எதிர்ப்பதாக கூறி வெளிநடப்பு செய்திருக்கிறோம். இந்த சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதற்கு இரண்டு விஷயங்களைக் கூறினேன். நாடாளுமன்றக் கூட்டுக்குழு அத்தனை அரசியல் கட்சிகளு்ககும் வாய்ப்புக் கொடுத்தது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர், நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும், நாடாளுமன்றக் கூட்டுக்குழுவிடம் தங்கள் கருத்தைத் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த மாநில சட்டப்பேரவை தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசுக்கு ஒரு அதிகார வரம்பு இருக்கிறது. சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு எப்படி அதிகாரம் இருக்கிறதோ, அதுபோல மத்தியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக அரசுக்கு சட்டம் கொண்டு வருவதற்கு அதிகாரம் இருக்கிறது.
இங்கு, மாநில சட்டப்பேரவையில் ஒரு சட்டத்தைக் கொண்டு வருகிறபோது, தமிழகத்தில் இருக்கிற ஏதாவது ஒரு மாநகராட்சியோ, பஞ்சாயத்தோ தீர்மானம் போட்டால் எப்படி இருக்குமோ, அதுமாதிரியான சூழல் ஏற்பட்டு விடக்கூடாது. ஏனெனில், தமிழக சட்டப்பேரவைக்கு ஒரு நீண்ட பாரம்பரியமும், பெருமையும் இருக்கிறது. அதை அரசியலுக்காக, செய்கின்ற செயலின் காரணமாக அந்த மாண்பைக் குறைத்துவிடக்கூடாது என்ற கருத்தை நான் வலியுறுத்தினேன்.” என்றார்.