உசிலம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பிரோவில் இருந்த 23 அரை பவுன் நகை, 4 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து மர்ம நபர்கள் சென்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயோத்திபட்டியைச் சேர்ந்தவர் பணராஜா மனைவி சுதா, பணராஜா பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் சூழலில், சுதா ஊரில் உள்ள தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் சுதா இன்று வழக்கம் போல வீட்டை பூட்டிவிட்டு, தோட்டத்திற்கு விவசாயம் செய்ய சென்றுவிட்டு மாலை விவசாய பணிகளை முடித்துவிட்டு வீட்டு திரும்பிய போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்., வீட்டிற்குள் சென்று பார்த்த போது பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பிரோவில் இருந்த 23 அரை பவுன் நகை, 4 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றிருந்தை அறிந்து சேடபட்டி காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த சேடபட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் முன் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.