



கரூர்-கோவை சாலையில் உள்ள அத்தார் ஜமாத் ஈத்கா பள்ளிவாசலில் நேற்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு சிறப்பு விருந்தினராக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டார்.


அப்போது அவர் பேசியதாவது:- எப்போதெல்லாம் மத்திய அரசு சிறுபான்மையினர் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறதோ, அப்போது முதல்நபராக அதை எதிர்க்கக்கூடிய தலைவராக முதலமைச்சர் இருந்து வருகிறார்.
சிறுபான்மையினரின் பாதுகாவராக முதல்-அமைச்சர் திகழ்கிறார்.
தமிழக பட்ஜெட்டில் பள்ளிவாசல்கள் புனரமைக்க ரூ.10 கோடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிதட்டு மக்களுடைய தேவைகளை உணர்ந்து செயல்படுத்தக்கூடிய அரசு திராவிட மாடல் அரசு. சிறுபான்மை மக்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்கியவர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி. கரூர் மாவட்டத்தில் கட்டக்கூடிய பள்ளி வாசல்களுக்கு விரைவில் அனுமதி கிடைப்பதற்கு உறுதுணையாக இருப்பேன். உங்களது கோரிக்கைகளை முழுவதுமாக நிறைவேற்றி தருவேன், என்றார்.

