• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தவெக தலைவர் விஜய் என்ன அன்னா ஹசாரேவா?… அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம்

ByP.Kavitha Kumar

Jan 21, 2025

அன்னா ஹசாரே போன்று தவெக தலைவர் விஜய் ஓராண்டு உண்ணாவிரதம் இருந்தாரா என அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

காஞ்சிபுரத்தை அடுத்து உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 900 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்காக விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி தங்கள் எதிர்ப்பை அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், பரந்தூர் மக்களை நேற்று நேரில் சந்தித்து பேசினார். வாகனத்தில் இருந்தபடியே மக்கள் மத்தியில் பேசினார். அப்போது, “டங்க்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால், அதே நிலைப்பாட்டை தானே பரந்தூர் பிரச்சினையிலும் எடுத்திருக்க வேண்டும்?

அரிட்டாபட்டி மக்கள் எப்படியோ, அப்படி தானே பரந்தூர் மக்களும். அப்படி தானே அரசாங்கம் யோசிக்க வேண்டும். ஆனால் அரசு அப்படி செய்யவில்லை. ஏன் செய்யவில்லை? ஏனென்றால், விமான நிலையத்தையும்
தாண்டி இந்த திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது. அது மக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள்” என்று குற்றம்சாட்டி பேசினார்.

பரந்தூர் மக்களை விஜய் சந்தித்தது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்,
, “அன்னா ஹசாரே போன்று ஓராண்டு உண்ணாவிரதம் இருந்தாரா விஜய்? நேற்றையை நிகழ்வு நேற்றோடு எல்லாம் முடிவடைந்து விட்டது.
ஆனால், மக்கள் பணியை நாங்கள் சூரியன் உதிக்கும் முன்பு ஆரம்பித்துள்ளோம், இரவில்தான் மக்கள் பணி முடிந்து வீடு திரும்புவோம். இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலை” என்று பதிலளித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு, “எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அதிரடிப்படை அமாவாசையாக மாறியவர்தான். அதனால் அமாவாசையைதான் கணக்கு போட்டு கொண்டிருப்பார். எங்கள் தலைவர், எங்கள் முதலமைச்சர் தமிழக மக்களின் நலனை கருத்தில்கொண்டு ஆட்சி நடத்துபவர். முதலமைச்சரின் அரும்பெரும் திட்டங்களால் 24*7 என்ற அடிப்படையில் செய்யப்படும் மக்கள் பணியால் 25 ஆண்டு காலம் இந்த திராவிட மண்ணிலே தமிழகத்தின் முதலமைச்சர் பதவியை எங்கள் முதலமைச்சர் தான் அலங்கரிப்பார்” என்று அமைச்சர் சேகர் பாபு பதிலளித்தார்.