• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வதந்திகளைப் பரப்பும் அறிக்கை: அண்ணாமலைக்கு அமைச்சர் ஆர்.காந்தி பதிலடி

ByP.Kavitha Kumar

Feb 11, 2025

வதந்திகளைப் பரப்பும் நோக்கத்துடன், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.காந்தி கூறியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வேட்டி சேலை வழங்கும் திட்டம் குறித்து நேற்று வெளியிட்ட அறிக்கைக்கு தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது. வேட்டி சேலைகள் வழங்குதல் மற்றும் நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குதல் ஆகிய இரு சீரிய நோக்கங்களுடன், ஒவ்வொரு ஆண்டும் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

கடந்த 27.08.2024 மற்றும் 23.10.2024 தேதியிட்ட அரசாணைகளின்படி, பொங்கல் 2025 திட்டத்திற்கு மொத்தத் தேவையான 1.77 கோடி வேட்டிகள் மற்றும் 1.77 கோடி சேலைகளை உற்பத்தி செய்ய ஆணைகள் வெளியிடப்பட்டது. இவ்வரசாணைகளின்படி, இத்திட்டத்திற்கு தேவையான சேலைகள் மற்றும் வேட்டிகள் முழுமையாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள கைத்தறிகள், பெடல்தறிகள் மற்றும் விசைத்தறிகளின் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த அரசு பொறுப்பேற்றவுடன் அனைத்து தரப்பு மக்களின் நலனையும் உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு துறையிலும் சீரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, கைத்தறி தொழிலின் வளர்ச்சி மற்றும் நெசவாளர்களின் நலனுக்காக இவ்வரசு சீரிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை செயல்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தினை தொடர்ந்து பேணி பாதுகாத்து வருகிறது.

மேலும், அரசு அலுவலர்களின் பணியிடமாற்றமானது நிர்வாக காரணங்களின் பொருட்டு மேற்கொள்ளப்படும் வழக்கமான நடைமுறை ஆகும். அதன்படி, 31.01.2025 தேதியிட்ட அரசாணையின்படி, 20-க்கும் மேற்பட்ட இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதில், கைத்தறி இயக்குநரின் பணியிட மாற்றமும் ஒன்றாகும்.

மாநிலத்தில் உள்ள, பல இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில், கைத்தறி இயக்குநர் பணியிட மாற்றத்தை மட்டும் திரித்து, அரசியல் உள்நோக்கத்துடன் தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.

ஆதலால், உண்மைக்கு புறம்பான, அடிப்படை ஆதாரமற்ற, தேவையற்ற வதந்திகளை பரப்பும் நோக்கத்துடன், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, அரசியல் ஆதாயத்திற்காக கண்ணியமற்ற முறையில் செய்திகளை வெளியிடுவது, மாநில அளவில் பொறுப்பில் உள்ள அரசியல் கட்சித் தலைவருக்கு உகந்ததல்ல.

தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்யும் வகையில், சிறப்பாக செயல்பட்டு மக்களின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று, நல்லாட்சி செய்து வரும் திமுக அரசின் மீது, வீண் பழி சுமத்தி, களங்கம் ஏற்படுத்த பகல் கனவு காணும் எண்ணம், எந்நாளும் நிறைவேறாது என்பதை உறுதிபட தெளிவுபடுத்திக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.