சிபிஐ-யால், கைது செய்யப்பட்டுள்ள தலைமை பொறியாளர் வழக்கில் விசாரணை பாரபட்சமின்றி நடைபெற அமைச்சர் லட்சுமி நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார்.
தலைமை பொறியாளர் கைது செய்யப்பட்ட வழக்கில் அமைச்சருக்கும் ஈடுபாடு உள்ளதால், அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் அவரது உறவினர்களின் சொத்துக்களையும் சிபிஐ அதிகாரிகள் ஆராய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி…
புதுச்சேரி பிஜேபி -என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில், ரெஸ்டோபர்களுக்கு தலா 40 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கப்படுகிறது. பட்டா மாற்றுவது, பள்ளிகளுக்கு முட்டை கொள்முதல், கறவை மாடுகள் வாங்குவது, தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது ஆசிரியர்கள் இடமாற்றம், குப்பை அள்ளுதல் என அனைத்து துறைகளிலும் ஊழல் தலை விரித்து ஆடுகிறது என்று குற்றம் சாட்டினார்.
பொதுப்பணித்துறையில் டெண்டர் விடப்படும் ஒவ்வொரு பணிகளுக்கும் 30% கமிஷன் வாங்கப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் காரைக்காலில் புதுச்சேரி தலைமை பொறியாளர் தீன தயாளன், துணை பொறியாளர், ஒப்பந்ததாரர் என மூன்று பேரும் பணத்தை கைமாற்றும் போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். தான் குற்றம் சாட்டிய போது, எந்த பதிலும் அளிக்காமல் ஏளனமாக பார்த்தவர்களுக்கு தற்போது ஆதாரப்பூர்வமாக லஞ்சம் ஊழல் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

புதிய பேருந்து நிலையம் கட்டுவதில் ஊழல் நடந்துள்ளது. 10 கோடி ரூபாய் கூட செலவு செய்ய முடியாத நிலையில், பேருந்து நிலையத்துக்கு 32 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டுள்ளது, இதில் ஹிமாலய ஊழல் நடந்து உள்ளது என்று கூறிய நாராயணசாமி, இதே போன்று குமரகுரு பள்ளம், குருசுகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும் மெகா ஊழல் நடந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
ஊழல்களின் மொத்த உருவமே ஸ்மார்ட் சிட்டி திட்டம் தான் என்று குற்றம் சாட்டிய நாராயணசாமி, காங்கிரஸ் ஆட்சியில் வெறும் 400 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
சாலை அமைக்கும் பணியில் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை லஞ்சம் வாங்கப்படுவதால் தரமான சாலைகள் போட முடியவில்லை. லஞ்சம் பெற்று தலைமை பொறியாளர் கைது செய்யப்பட்ட வழக்கில், பல்வேறு பெரிய புள்ளிகள் எல்லாம் சிக்கி இருக்கிறார்கள்.
அதனால் பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நாராயணசாமி..,
சிபிஐ அதிகாரிகள் எந்தவித அழுத்தத்திற்கும் ஆளாக கூடாது தற்போது தான் பூனை குட்டி வெளியே வந்துள்ளது. இனிமேல் பெரிய, பெரிய பூனைகள் எல்லாம் வெளியே வரும்.
பொறியாளர் கைது செய்யப்பட்ட வழக்கு விசாரணை, பாரபட்சம் இல்லாமல் நடக்க வேண்டும் என்றால் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். லட்சுமி நாராயணனின் சொத்துக்கள் எவ்வளவு? உறவினர்களின் சொத்துக்களை எவ்வளவு? என்று சிபிஐ அதிகாரிகள் ஆராய வேண்டும். அமைச்சர் லட்சுமி நாராயணனுக்கு மேல் உள்ள ஆட்சியாளர்களிடமும் விசாரிக்க வேண்டும். இந்த ஊழல்கள் எல்லாம் முதலமைச்சருக்கு தெரியாமல் நடக்கவில்லை. முதல்வரும், அமைச்சரும் இதில் ஈடுபட்டுள்ளனர் என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டிய நாராயணசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அவரது வீட்டை முற்றுகையிட போவதாகவும் தெரிவித்தார்.