மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால், 30-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
தமிழக முதல்வரை பார்ப்பதற்காக சென்று விட்டு திரும்பிய போது பரிதாபம்
விருத்தாசலம் அடுத்த பழைய பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த வனிதா (40), லட்சுமி (55), புஷ்பா (70), அன்புமணி (23), பூராசாமி (45), பிரகாஷ் மகன்கள் தருண்ராஜ் (9), சரண் (12), சாந்தி (45), உள்ளிட்ட 37 பேர் விருத்தாசலம் வழியாக வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்ப்பதற்காக மினி லாரியில் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது தமிழக முதலமைச்சர் விருத்தாசலத்தில் இருந்து சென்றவுடன் மீண்டும் அவர்கள் வந்த மினி லாரியில் ஏறி புறப்பட்டு பழைய பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது விருத்தாசலம் அடுத்த இருசால குப்பத்திலிருந்து கச்சிராயநத்தம் வழியாக சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. இதில் மினி லாரியில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்தனர். உடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனைவரும் மீட்கப்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த அன்புமணி, ராதாகிருஷ்ணன் (50), செல்வம் (37), தர்மலிங்கம் (55), பாஸ்கர் (55), பத்மாவதி (50), குப்புசாமி (55), செந்தாமரை (45), வேம்பரசி (32), தமிழ்ச்செல்வி (52) ஆகிய பத்து 10 மேல் சிகிச்சைக்காக சிதம்பரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து தகவல் கிடைத்து விரைந்து சென்ற விருத்தாசலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.