தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறும் நிலையில் இதில் தூய்மை பணி, காவல் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இரவில் பிரசவ வார்டுக்கு வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த பாதுகாவலர் பாலமுருகனிடன் இருசக்கர வாகனத்தை நிறுத்துவதில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்த சிலர், ஒரு கட்டத்தில் ஒப்பந்த பாதுகாவலாளி பாலமுருகனை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் காயமடைந்த பாலமுருகன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நிலையில் தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தரும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் தங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவமனை பாதுகாவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்








