தமிழக ரேஷன் கடைகளில் மே மாதத்தில் பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்காத ரேஷன் அட்டைதாரர்கள், ஜூன் முதல் வாரத்தில் வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு, சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25க்கும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கார்டு என்பது இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த கார்டுகள் மூலமாக நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் மலிவான விலையில் ரேஷன் பொருட்களை பெறுகின்றனர். ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே அரசு வழங்கும் பல சலுகைகளை குடிமக்கள் பெற முடியும். தற்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீதான முடிவுகள் மேற்கொண்டு அவற்றை கொள்முதல் செய்வதில் காலதாமதம் நேரிட்டது. மே மாதத்தில் பருப்பு மற்றும் பாமாயில் வினியோகம் ஒழுங்காக விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் சார்பில் புகார்கள் எழுந்து வந்தது.
இந்நிலையில் தற்போது பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. எனவே குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு மே மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் அவர்களுக்கான மே மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஜுன் மாதம் முதல் வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.
