பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்பாடி ஊராட்சி, நெடுவாசல் கிராமத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளர்ச்சி துறை மற்றும் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று (26.04.2025) நெகிழி கழிவு குப்பைகளை சேகரித்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியை (பிளாஸ்டிக்) ஒழிப்பதிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதிலும், தனி கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தமிழ்நாடு அரசு பல்வேறு பிரச்சாரங்களை விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதற்கான விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

அதன் ஒரு அங்கமாக தமிழகம் முழுவதும் மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் நிகழ்வினை 2025 ஆம் ஆண்டு முழுவதும் மாதங்களின் இறுதி சனிக்கிழமைகளில் நடைமுறைப்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் நெடுவாசல் கிராமத்தில் மாபெரும் நெகிழி கழிவு சேகரிக்கும் பணி மாவட்ட ஆட்சியர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஊராட்சி தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து நெடுவாசல் பள்ளி அருகே உள்ள மட்ட குட்டையில் பிளாஸ்டிக் கழிவு குப்பைகளை சேகரித்தார். நெடுவாசல் கிராமத்தில் அனைத்து இடங்களிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனித்தனியாக சேகரித்து, முழுமையாக தூய்மைப்படுத்திட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
மேலும் நெடுவாசல் கிராமத்தில் பள்ளி அருகே உள்ள மட்ட குட்டை, அரசு பள்ளி வளாகம், மேல்நிலை நீர்தேக்க தொட்டி, அங்கன்வாடி மையம், அனைத்து வீதிகள், வாய்க்கால்கள் ஆகிய இடங்களில் தூய்மை பாரத இயக்கப் பணியாளர்கள் தன்னார்வலர்கள் மற்றும் ஊராட்சித் துறை பணியாளர்கள் அனைவரும் நெகிழி கழிவு சேகரித்து கிராமத்தை தூய்மைப்படுத்தினார்கள்.
மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு நிகழ்வினில் 250க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், தூய்மை பாரத இயக்க பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்று, தூய்மை பணியினை மேற்கொண்டு பொதுமக்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்து வழங்குவது நெகிழி பயன்பாட்டை தவிர்ப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் விஜயபிரியா, உதவி பொறியாளர் செல்வி.வாணிஸ்ரீ, பெரம்பலூர் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜபூபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், தூய்மை பணியாளர்கள், தூய்மை பாரத இயக்க பணியாளர்கள் தன்னார்வலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.