• Sat. Apr 27th, 2024

இந்தியாவை புகழ்ந்து பேசிய இம்ரான் கான்… வெளியேற சொன்ன மரியம் நவாஸ்

Byகாயத்ரி

Apr 9, 2022

நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்குச் செல்லுங்கள்’ என்று பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் மரியம் நவாஸ் பிரதமர் இம்ரான் கானை கடுமையாக சாடியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டின் எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. இந்த வாக்கெடுப்பை முன்னிட்டு இம்ரான் கான் நேற்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதில், தனது ஆட்சி நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை சந்திப்பதற்கு அமெரிக்க வல்லரசே காரணம் என்று குற்றம் சுமத்தியவர், இந்தியாவைவும், இந்திய வெளியுறவு கொள்கைகளையும் புகழ்ந்து பேசினார். அதில், “பாகிஸ்தான், ரஷ்யாவுக்கு எதிராக பேச வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் நமக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். ஆனால் இந்தியா இறையாண்மை கொண்ட நாடு என்பதால் அவர்களால் இதே அழுத்தத்தை இந்தியாவுக்கு கொடுக்க அவர்களுக்கு துணிவில்லை.

இந்தியாவில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த எந்த வல்லரசு நாடும் முயற்சிக்காது. மக்களின் நலன்களைக் காரணம் காட்டி ரஷ்யா-உக்ரைன் போரில், இந்தியா எந்த பக்கமும் நிற்காத மறுத்தபோதும் எந்த வல்லரசு நாடும் இந்தியாவுக்கு எதிராக நிற்கவில்லை, நிற்கவும் முடியாது. நாமும் இந்தியாவும் இணைந்து நமது சுதந்திரத்தைப் பெற்றோம். ஆனால் மேற்கத்திய நாடுகளால் பாகிஸ்தான் ஒரு டிஷ்யூ பேப்பராகப் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுகிறது. இந்தியர்கள் மிகவும் சுய மரியாதையை உள்ளவர்கள். இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் சுயமரியாதையை கற்றுக்கொள்ள வேண்டும்” என்று பேசியிருந்தார்.

இம்ரான் கானின் ‘இந்தியா’ குறித்த இந்தப் பேச்சுக்கு அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய மரியம் நவாஸ் கடுமையாக எதிர்த்துள்ளார். மரியம் தனது பதிவில், “அதிகாரம் கையை விட்டு செல்லப்போகிறது என்பதை நினைத்து மதி மறந்துள்ள அவரிடம் யாரவது சொல்லுங்கள், அவரை துரத்தியது அவரின் சொந்தக் கட்சிக்காரர்கள் இன்றி, வேறு யாருமில்லை என்பதை. இம்ரானுக்கு இந்தியாவை பிடித்திருந்தால், பாகிஸ்தானினை விட்டு வெளியேறி அங்கு செல்ல வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

முன்னதாக, தனது டுவிட்டர் பதிவில் மரியம் நவாஸ், “இந்தியாவின் பிரதமர்களுக்கு எதிராக 27 நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால் யாரும் அங்கு அரசியலமைப்பு, ஜனநாயகத்துடன் விளையாடவில்லை என்பதை இந்தியாவைப் புகழ்ந்து பேசுபவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றுள்ளார். ஆனால் வாஜ்பாய்
இம்ரானை போல் அரசியலமைப்பையோ அல்லது அவரின் தேசத்தையும் பணயக் கைதியாக வைக்கவில்லை” என்றும் இம்ரான் கானை கடுமையாக விமர்சித்துள்ளார்.இதனால் பாகிஸ்தான் அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *