நவீன சாகுபடி தொழில் நுட்பத்தின் மூலமும் உயர் விளைச்சல் ரகங்கள் மூலமும் இந்தியாவில் உணவு உற்பத்தியை பன்மடங்கு அதிகரிக்க செய்ததால் நாடு தன்னிறைவு பெற்றுள்ளது .
இந்தியாவில் 1960 களில் ஏற்பட்ட உணவு பற்றாக்குறையை பசுமை புரட்சியின் மூலம் நமது வேளாண் விஞ்ஞானிகள் நிவர்த்தி செய்தனர். இருப்பினும் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்பவும் ,விளைநிலங்கள் கட்டடங்களாக மாறி வருவதாலும், பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மாறாக தொடர்ச்சியாக பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் செயற்கை உரங்கள் பயன்பாட்டால் மண்ணின் பேரூட்டங்கள், நுண்ணூட்டங்களில் குறைபாடு ஏற்படுவதாலும், அங்கக உரங்களை பயன்படுத்தாமை அல்லது குறைத்து விடுவதாலும் பசுந்தாள் உரமிடுதல் காலத்தின் கட்டாயம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளதாக வைகை அணை வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவரும் ,இணைப்பேராசிரியருமான மதன்மோகன் தெரிவித்தார் .
மண் மற்றும் பயிருக்கு எல்லா விதமான நன்மைகளை அளிக்கவல்ல அங்கக இடுபொருட்களை நாம் விவசாயத்தில் பயன்படுத்துவது மிகவும் அவசியம் .தொடர்ந்து தழை, எருக்கைளை நிலத்தில் இடுவதால் மண்ணின் கரிமம் நிலைபெறும். மண்ணில் சேரும் கரிமப் பொருட்களால் மண்புழுக்களின் வளர்ச்சியும் ,தழைச்சத்தை நிலைப்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியும் அதிகரிக்கின்றன. மேலும் மண்ணின் இயல்பு அடர்த்தி குறைகிறது .இதனால் உழுவது முதல் விதை முளைப்பு |பயிர் வளர்ச்சி நீர்பிடிப்பு ஆகியன எளிதாகின்றன.
எல்லா நன்மைகளையும் அளிக்க வல்ல அங்கக மூலங்களான குப்பை எரு, தொழுவுரம், கம்போஸ்ட் உரம், மண்புழு உரம், பசுந்தாள் உரம் பசுந்தைழை உரங்கள், உயிர் உரங்கள் ஆகிய இடுபொருட்களை நாம் விவசாயத்தில் பயன்படுத்துவது மிகவும் அவசியமாகும்
பசுந்தாள்களை மண்ணில் இட்டபின் பயிரிடப்படும் பயிர்களின் விளைச்சல் அதிகரிக்கின்றது. மேலும் பயிர்களுக்கான ரசாயன உரத் தேவையும் குறைகிறது.நெல் வயலில் நாற்று நடுவதற்கு 20 முதல் 25 நாட்களுக்கு முன்னரும் மற்ற நிலங்களில் விதைப்பதற்கு 30 முதல் 35 நாட்களுக்கு முன்னரும் பசுந்தாள் களை மண்ணில் இட்டு உழுது விட வேண்டும் .இதனால் மண்ணில் பயிருக்கு கிடைக்கும் துத்தநாகச் சத்து அதிகரிக்கின்றது. பசுந்தாள் உரப் பயிர்களான கோ 1 சணப்பு,கோ- 1 மணிலா, எம்டியு -1 கொழிஞ்சி, அகத்தி ஆகிய ரகங்கள் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. பசுந்தாள் உற்பத்திக்கு ஏக்கருக்கு என்றால் 10 கிலோ ,தக்கைப்பூண்டு 20 கிலோ, மணிலா அகத்தி என்றால் 15 கிலோ மற்றும் கொழிஞ்சி என்றால் 8 கிலோ போதுமானது ,பசுந்தாள் பயிர்கள் விதை உற்பத்தி செய்வதற்கு வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்கள் சிறந்ததாக இருக்கும், சுமார் 450 கிலோவிலிருந்து 550 கிலோ வரை விதை அறுவடை செய்யலாம். மேலும் பசுந்தாள் உயிர்ப்பு பொருட்களாக சுமார் 15 முதல் 20 டன் வருவதற்கும் வாய்ப்புள்ளது. பசுந்தாள் உரங்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மண்ணில் வளம் மேம்படும். விளை நிலம் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவது இருந்து பாதுகாக்க முடியும் என்று வைகை அணை வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர் முனைவர் மதன்மோகன் தெரிவித்தார்.