மதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 இல் திருச்சியில் மாநாடு அறிவித்துள்ளார் வைகோ. அதற்கு போட்டியாக மாநாடு அறிவித்துள்ளார் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா.
இந்நிலையில் அதே செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்தநாள் போட்டி மாநாட்டை அறிவித்துள்ளார் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், வைகோவால் துரோகி என விமர்சிக்கப்பட்டவருமான மல்லை சத்யா.
மல்லை சத்யாவை மாத்தையாவோடு ஒப்பிட்டு கடந்த ஜூலை 9 ஆம் தேதி ஒரு யு ட்யூப் சேனலுக்கு பேட்டியளித்தார் வைகோ. இதனால் ஆவேசமாக பேட்டிகள் கொடுத்தார் மல்லை சத்யா.
அவரை இன்னமும் மதிமுகவில் இருந்து அதிகாரபூர்வமாக நீக்கவில்லை என்றாலும்… மல்லை சத்யா மதிமுகவில் இல்லை என்பதே தற்போதைய நிலைமை.
இந்நிலையில்தான், செப்டம்பர் 15 அன்று போட்டி மாநாடு அறிவிப்பை இன்று (ஆகஸ்டு 17) வெளியிட்டிருக்கிறார் மல்லை சத்யா.
“என் மீதான துரோகப் பழியை நீதிகேட்டு ஆகஸ்ட் 02 சென்னை சிவானந்த சாலையில் நடைபெற்ற உண்ணா நிலை அறப்போராட்டத்தில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று துடைத்தெறிந்தீர்கள்.
அதைத் தொடர்ந்து எதிர் வரும் 19- 08- 2025 செவ்வாய் கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மதிய உணவோடு நிறைவு செய்யும் வகையில்,
சென்னை மண்டல பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பணிக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஒன்றியம் நசரத்பேட்டை அரிப்பிரியா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கழகத்தில் 94- 98 வரை 5 ஆண்டுகள் மாமல்லபுரம் பேரூர் கழக செயலாளராக, 98 ஒர் ஆண்டு காஞ்சி மாவட்ட கழக துணை செயலாளராக, 98 – 2004 வரை 6 ஆண்டுகள் கழகத்தின் இளைஞர் அணி செயலாளராக, 2004 – 2025 வரை 21 ஆண்டுகள் கழகத்தின் துணை பொதுச் செயலாளராக பணியாற்றிவுள்ளேன்.
இப்படி பணியாற்றிய சேனாதிபதி மல்லை சத்யாவிற்கே இந்த கதியென்றால் சாமானிய தொண்டர்களுக்கு என்ன நேரிடும் என்று நீங்கள் நினைத்து எரிமலையாக வெடித்து எழுந்து கைகாசை செலவு செய்து ஊர் தோறும் சுவர் விளம்பரம் வண்ண எழுத்துக்களால் பிரதிபலிக்க வைத்து எங்களால் முடியும் என்பதை நிருபித்து வருகின்றீர்கள்.
உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் தவிக்கின்றேன்.
இப்படி ஒரு சூழலை உருவாக்கித் தந்த தலைவர் வைகோ அவர்களுக்கும் அவரின் மகன் துரைக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும்.
தமிழ்த் தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழாவை செப்டம்பர் 15 காஞ்சியில் முப்பெரும் விழாவாக எழுச்சியுடன் கொண்டாட
வியூகம் வகுப்போம் வாகை சூடுவோம்” என்று கூறியுள்ளார் மல்லை சத்யா.
மீனவர்கள் இடையே நடுக்கடலில் மோதல்!