விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வல்லம்பட்டி, அன்பின் நகரம் அச்சங்குளம்,கோட்டைபட்டி ,விஜய கரிசல்குளம், பாண்டியாபுரம், மார்க்க நாதபுரம், கீழச்சத்திரம், உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக பயிர்கள் வளர்ச்சி நன்றாக இருந்து வருகிறது.

இந்த ஆண்டு மக்காச்சோளம் விளைச்சல் அமோகமாக இருக்கும் என எதிர்பார்த்து விவசாயிகள் இருந்து வரும் நிலையில்.காட்டு பன்றிகள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வந்து செடிகளை முற்றிலும் அழித்து விட்டன. தோட்டத்தில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் முழுமையாக அழிக்கப்பட்டதால் விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மார்க்கநாதபுரம் விவசாயி வீர முருகன் கூறியது
மானாவாரி பயிரான மக்காச்சோளம் இப்பொழுதில் தொடர்ந்து பயிரிடப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டை கட்டிலும் இந்தாண்டு தொடர் மழை காரணமாக பயிர்கள் நன்கு வளர்ந்து வருகின்றன. இந்நிலையில் வல்லம்பட்டி பகுதியில் ஏராளமான கருவேல மரங்கள் காடுகள் போன்று வளர்ந்துள்ளன. இந்த வனப்பகுதியில் காட்டு பன்றிகள், மான்கள், அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றன.

நள்ளிரவு நேரங்களில் தோட்டத்தில் காவலுக்கு இருந்தாலும் வனவிலங்குகளால் மக்காச்சோள பயிர்கள் அதிகளவு சேதப்படுத்தப்பட்டு வருவதால் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் குறை தீர்க்கும் முகாமில் கடந்த ஐந்து ஆண்டுகளாக புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இந்த ஆண்டு விளைச்சல் சிறிது கூட இல்லாத அளவிற்கு பெரிதும் நஷ்டம் அடைந்துள்ளோம். இதற்கு அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கூறினார்.








