நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டானிங்டன் பகுதியில் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை கும்பாபிஷேக கொடியேற்ற விழா நடைபெற்றது. தொடர்ந்து, மகா கும்பாபிஷேக விழா நடைபெறும் நிலையில்,நேற்று விநாயகர் கோவிலில் இருந்து பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மங்கல வாத்திய முழங்க புண்ணிய தீர்த்தம், முளைப்பாரி, ஆஞ்சநேயருக்கு சீதனம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோத்தகிரி டானிங்டன் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, புண்ணிய தீர்த்தம், முளைப்பாரி, கலசம், கும்பம் ஆகியவற்றை சீதனமாக கொண்டு வந்தனர். தொடர்ந்து வேத யாகமங்கள் முழங்க யாகசாலை பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று காலை ஸ்ரீ விஸ்வ சேனா வழிபாடு, மகா சங்கல்பம், யாகசாலை வேத பாராயணம், நாடி சந்தானம் உயிரூட்டுதல், மூலிகையினால் யாகம், தீபாராதனை, கடம் புறப்பாடு நடைபெற்ற பின் மதுரை ஆதீனம் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.