தேனி மாவட்டம் கம்பத்தில் அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் கம்பமெட்டு ரோடு அம்பேத்கார் காலனி பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில். தனி ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் இன்று ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக நேற்றைய தினம் விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி பூஜை முதல் கால வேள்வி பூஜைகள் பூரணா ஹீதி உள்ளிட்டவை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாக வேள்வி பூஜைகள் நடைபெற்று நாடி சந்தானம் மகாபூர்ணஹீதி மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கலசங்கள் புறப்பாடாகி ஆலய பதிவார மூர்த்திகளுக்கு கலச அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்பாக அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் மற்றும் சன்னிதானத்தில் உள்ள உப தெய்வங்களான ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீ பால முருகன், ஸ்ரீ பால நாகம்மாள், ஸ்ரீ பெரிய கருப்பசாமி ஆகிய தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு கும்பத்தில் ஊற்றி இந்த கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கும்பத்திற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட தண்ணீர் கொண்டு தீர்த்தவாரி தெளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கம்பம் நகர மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் மற்றும் ஏராளமான பக்தர்களும் கோவில் சமூகத்தைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.