• Fri. Apr 26th, 2024

மீண்டும் விருதுநகர் அரசியலுக்கு வருகிறாரா மாஃபா பாண்டியராஜன்?

மீண்டும் சொந்த மண்ணிற்கு முன்னாள் மாஃபா பாண்டியராஜன் வரப்போகிறார்.., அதற்கு அச்சாரம் போடத்தான் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை அவரது இல்லத்தில் நேரடியாக சந்தித்து பேசியிருக்கிறார் என்பதுதான் அ.தி.மு.க அரசியல் வட்டாரத்தின் தற்போதைய ஹைலைட்டே!


விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலில் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியின் இல்லத்தில் இன்று திடீர் விசிட் அடித்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அண்ணே, நான் வந்துட்டேன் என்று அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியிருக்கிறார். மாஃபா பாண்டியராஜனுக்கு இன்முகத்தோடு, வாங்கண்ணே! என்று பதிலுக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. இந்தச் சந்திப்பில் முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் உடன் சிவகாசி கிழக்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர்கள் பலராம் மற்றும் தெய்வம் ஆகியோர் உடனிருந்தனர்.


இந்தச்சந்திப்பு குறித்து அ.தி.மு.க.வின் மூத்த ர.ர.க்கள் சிலரிடம் பேசினோம்..,
அது ஒண்ணும் இல்லண்ணே! இன்று கல்யாண நிகழ்ச்சி ஏராளம். அந்த நிகழ்ச்சிக்காக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வந்திருக்காங்க. அதுவும் விருதுநகர் மாவட்டத்தில் பல பகுதிகளில் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருக்காங்க.

வந்தவரு எங்க பாசமிகு அண்ணன், எங்களுக்கெல்லாம் இன்னும் பால்வளத்துறை அமைச்சராக இருக்கிற கே.டி.ராஜேந்திரபாலாஜியின் இல்லத்திற்கு வந்து மரியாதை நிமித்தமா முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சந்திச்சிருக்காரு. உங்களுக்கே தெரியும் விருதுநகர் மாவட்டத்துல 7 தொகுதி. அதுல 6 தொகுதிய தி.மு.க கைபற்றியது. அதுல ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிய மட்டும் அ.தி.மு.க கைப்பற்றியது.

மீண்டும் மாஃபா அண்ணே வாங்கன்னு நாங்க பலமுறை கோரிக்கை வச்சிக்கிட்டே இருக்கோம். அத மனசுல வச்சுக்கிட்டுத்தான், நடக்க இருக்கின்ற நகராட்சித் தேர்தல்ல முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அண்ணனுடைய ஒத்துழைப்பு இங்க இருக்கும்னு நாங்க நினைச்சுக்கிட்டு இருக்கோம். மீண்டும் விருதுநகர் மாவட்டத்தில் நாடார் ஓட்டுக்களைக் கைப்பற்றவும், தி.மு.க.வைக் கதற விடவும் அ.தி.மு.க.வை தலைநிமிர்த்தவே இந்தச் சந்திப்பு இருக்கலாம் என்று நாங்கள் யூகத்தின் அடிப்படையில்தான் உங்களிடம் பேசுகின்றோம் என்றனர் சிரித்த முகத்தோடு.
அப்ப மீண்டும் விருதுநகருக்கு முன்னாள் அமைச்சர் மாஃபா வருவது உறுதியாகி விட்டது போல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *