• Fri. Apr 26th, 2024

தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மதுரை பின்னடைவு- சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Byகுமார்

Dec 2, 2021

தமிழகத்திலேயே தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மதுரை மாவட்டம் மிகவும் பின் தங்கியே உள்ளது. ஆகையால் மதுரை மக்கள் தாங்களாக முன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்.

ஓமேக்ரான் வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் பொருட்டு மதுரை விமானநிலையத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் இன்று ஆய்வு மேற்கொண்டார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தென்னாப்பிரிக்காவில் உருவான புதிய வகை உருமாறிய ஒமேக்ரான் கரோனா வைரஸ் காரணமாக தமிழகத்திலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங், பிரேசில் உள்ளிட்ட நான்கு நாடுகளில் மட்டுமே பரவியிருந்த ஒமேக்ரான் வைரஸ், தற்போது உலகின் 11 நாடுகளில் பரவியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தால் அக்குறிப்பிட்ட 11 நாடுகளும் உயர் எச்சரிக்கை நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகையால் அந்நாடுகளிலிருந்து வருகை தரக்கூடிய நபர்கள் குறித்த விபரங்கள் சேகரிக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களில் மேற்குறிப்பட்ட நான்கு நாடுகளிலிருந்து 477 பேர் வருகை தந்துள்ளனர். இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் எவரும் ஒமேக்ரான் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகவில்லை எனத் தெரியவந்துள்ளது. அதேபோன்று மதுரை விமானநிலையத்திலும் பரிசோதனை நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசின் சுகாதாரத்துறையும் இந்தியாவிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது.ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு குறைந்தபட்சம் 5 மணி நேரம் ஆகும் என்பதால், அக்குறிப்பிட்ட விமான நிலையங்களில் அவர்களைத் தங்க வைப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெகட்டிவ் எனத் தெரிந்த பிறகு அவர்கள் தத்தமது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் வீடுகளில் அவர்கள் 7 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுவதோடு, அவர்கள் தொடர்ந்து சுகாதாரத்துறையின் மூலமாக கண்காணிக்கப்படுவார்கள்.

ஓமேக்ரான் வைரஸ் குறித்து முழுமையாக இன்னும் தெரியவில்லை. ஆகையால், அதன் தன்மை, வேகம் ஆகியவற்றைப் பொறுத்து என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படலாம் என்பது குறித்து தெரிய வரும். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தற்போது தமிழகம் முழுவதும் 78 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. இருந்தபோதும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். கரோனாவைத் தொடர்ந்து, ஆல்ஃபா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், காமா ஆகியவற்றைத் தொடர்ந்து ஒமேக்ரான் வந்துள்ளது. ஆகையால் தடுப்பூசி என்பது உயிர்ப்பாதுகாப்பு தொடர்புடையது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது உருவாகியுள்ள ஒமேக்ரான் வைரசின் பரவுதல் தன்மை பிற அனைத்து வைரஸ்களைக் காட்டிலும் கூடுதலாக உள்ளது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரசின் வீரியம் இன்னும் தெரியவில்லை என்பதால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். பொதுசுகாதார விதிகளின்படி பொது இடங்களுக்குச் செல்பவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். இதுகுறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுப்பார்கள். தமிழகம் முழுவதும் தற்போது 3 ஆயிரம் உள்ளாட்சிகளில் 100 விழுக்காடு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஊரடங்கு போன்ற அறிவிப்புகள் வரக்கூடாது என்பதற்காகத்தான் தமிழக அரசு ஒமேக்ரான் விசயத்தில் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. முகக்கவசம், தடுப்பூசி என இந்த இரண்டு விசயங்களில் தமிழக மக்கள் கவனம் செலுத்தினால், ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை.தமிழக முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 400லிருந்து 600க்குள்தான் உள்ளது. கூடுதலாக டெங்கு பரவலைத் தடுப்பதிலும் தமிழக சுகாதாரத்துறை கவனம் எடுத்து செயல்படுகிறது. ஒரு சில நாடுகளில் கரோனாவுக்காக மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்துகிறார்கள். இங்கு அதற்கான தேவை எழவில்லை.

தமிழர் பண்பாடு, மொழி, கலாச்சாரம் ஆகியவற்றில் பெருமைக்குரிய மதுரை மாவட்டம்தான் தற்போது தடுப்பூசி விசயத்தில் மிக மிகக் குறைவான எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. மதுரையைப் பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில் 71 விழுக்காடுதான் உள்ளது. ஆனால் ஒட்டு மொத்த தமிழகம் 79 விழுக்காடு செலுத்தியுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியதில் தமிழகம் 45 விழுக்காடென்றால் மதுரை 32 விழுக்காடுதான் செலுத்தியுள்ளது. இது மிகவும் வருத்தத்திற்குரிய விசயம். ஆகையால் மதுரை மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வர வேண்டும்’ என்றார்.இந்நிகழ்வில் சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனீஷ் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *