• Sat. Apr 27th, 2024

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை 17 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றி, முகத் தோற்றத்தையும் மீட்டெடுத்து சாதனை!

ByN.Ravi

Mar 26, 2024

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ நிபுணர்கள், தாக்குதலுக்கு ஆளான 17 வயது சிறுவனுக்கு எட்டு மணி நேரம் அவசர அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு உயிரை காப்பாற்றி, அவரது முகத் தோற்றத்தையும் உறுப்புகளின் செயல்பாடுகளையும் முழுமையாக மீட்டெடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

கமுதியை சேர்ந்த, பி.காம் இரண்டாம் ஆண்டு மாணவனை, தெரிந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்து, முகம் மற்றும் கழுத்தில் பல இடங்களில் ஆழமான வெட்டுக் காயங்களால், முகம் சிதைந்த நிலையில், சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலில் உள்ள தசைகள், எலும்பு மற்றும் மூச்சுக்குழாய் ஆகியவை வெளியே தெரிந்தன. நோயாளியின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது.

அதிகப்படியான இரத்த இழப்பு ஏற்பட்டதாலும் சுவாசிப்பதில் தடை ஏற்பட்டதாலும், அவருக்கு எந்த நேரத்திலும் ஹைபோவோலெமிக் (hypovolemic) ஷாக் ஏற்படும் நிலை காணப்பட்டது.

மேலும் அவரது உடலில் உள்ள திசுக்கள் மற்றும் உறுப்புகள் செயல்பட போதுமான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை பெற முடியாத ஆபத்தான நிலை காணப்பட்டது.

இதனை மீனாட்சி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவு முதுநிலை நிபுணர் டாக்டர் நாகேஸ்வரன், பல் மற்றும் மாக்ஸில்லோ ஃபேஷியல் அறுவை சிகிச்சைத் துறை முதுநிலை நிபுணர் டாக்டர் ஜிப்ரீல் ஓய்சுல், பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் தலைவர் டாக்டர் பினிட்டா ஜெனா உள்ளிட்ட பல்துறை மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவமனை மேலாளர் டாக்டர் கண்ணன் ஆகியோர் மருத்துவ நிபுணர்கள் குழுவினரின் முழு ஒத்துழைப்புடன் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பல அவசர அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மருத்துவர்கள் அவரது உயிரை காப்பாற்றியதோடு அவரது முகத்தோற்றம் மற்றும் உடல் இயக்கத்தையும் மீட்டெடுத்தனர்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு சுமார் ஐந்து நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு, சிறுவன் முழுமையாக குணமடைந்தார். முகத்தில் ஒரு தழும்பு கூட இல்லாமல் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *