• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மதுரை கள்ளழகர் கோவில் ஆடித்தேரோட்டம்..,

ByM.S.karthik

Aug 9, 2025

மதுரை மாவட்டத்தில் அழகர்மலை அடிவாரத்தில் திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று புகழப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றான கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடிப்பெருந்திருவிழா சிறப்புடையதாகும். இந்த விழா கடந்த ஆகஸ்ட் – 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத கள்ளழகர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

ஆடி பெருந்திருவிழாவை முன்னிட்டு மதுரை திருமாலிருஞ்சோலை அழகர் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இத்திருவிழா கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் அன்னம், சிம்மம், அனுமார், யானை, குதிரை உள்ளிட்ட பல வாகனங்களில் தினந்தோறும் புறப்பாடு நடந்தது.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்ட நிகழ்வில், இன்று காலை 8.40 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில், சுந்தரராச பெருமாள் தேவியர்களுடன் எழுந்தருளினார். இதனைத்தொடர்ந்து காலை 9 மணிக்குத் திருத்தேர் வடங்களைப் பிடித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்துச் சென்றனர்.

மேலும் பக்தர்கள் மேளதாள இசையுடன் சந்தனக் குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்தும், கிடாய் வெட்டியும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவு செய்தனர். இந்த திருவிழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மேற்பார்வையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அழகர்மலை நூபுர கங்கை ராக்காயி அம்மன், ஆறாவது படைவீடு சோலைமலை முருகன், மூலவர் கள்ளழகர் பெருமாள், மற்றும் பதினெட்டாம் படி கருப்பணசுவாமி ஆகிய கோவில்களில் நீண்ட வரிசையில் சென்று நெய் விளக்குகள் ஏற்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த தேர்த் திருவிழாவில் பத்திரப் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மேலூர் எம்எல்ஏ பெரிய புள்ளான், ஒன்றிய குழு தலைவர் பொன்னுச்சாமி, பேருராட்சி தலைவர் குமரன், ஊராட்சி மன்ற தலைவர் தீபா தங்கம் மற்றும் வருவாய் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள், திருக்கோவில் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த தேர்த் திருவிழாவைக் காண மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்தும், கேரளா போன்ற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்களுக்கு மேல் வந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மேலும் இந்நிகழ்வில் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த தொழிலதிபர் வி எஸ் பி கணேசன் மற்றும் குடும்பத்தினர் பக்தர்களுக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 1000 க்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கும் அன்னதானம் வழங்கினர்.