• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

உலகப் புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு… ஆன்லைன் முன்பதிவு இன்று தொடக்கம்!

ByP.Kavitha Kumar

Jan 6, 2025

உலகப்புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று (ஜனவரி 6) முதல் தொடங்க உள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரத்தில் வருகிற 14-ம் தேதியும், பாலமேட்டில் 15-ம் தேதியும், அலங்காநல்லூரில் 16-ம் தேதியும் நடக்கிறது. இந்தநிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இந்த போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு பிறப்பித்து உள்ளது. அதனை பின்பற்றி போட்டிகள் நடக்கின்றன.

இந்த நிலையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (ஜனவரி 6 ) மாலை 5 மணிக்கு தொடங்கவுள்ளது. எனவே காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் madurai.nic.in என்ற இணையதள முகவரி மூலமாக தங்களது பெயர்களை இன்று மாலை 5 மணி முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்திட வேண்டும்.

அதே போல் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கான பதிவுகளையும் madurai.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் மாடுகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய மூன்று கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் ஏதாவது ஒரு கிராமத்தில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதியளிக்கப்படும்.

ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாட்டின் உரிமையாளர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்களது பெயர்களை 06.01.2025 தேதி மாலை 05.00 முதல் 07.01.2025 தேதி மாலை 05.00 மணி முடிய பதிவு செய்திடல் வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன், உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டபின் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.