• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நம்பர் பிளேட்டுகளில் தலைவர்கள் படம் இருந்தால் கடும் நடவடிக்கை மதுரை ஐகோர்ட்டு

இருசக்கர, நான்கு சக்கர வாகன நம்பர் பிளேட்டுகளில் தலைவர்கள், நடிகர்கள் படம் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கரூரை சேர்ந்த சந்திரசேகர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மத்திய, மாநில அரசுகளின் மோட்டார் வாகன சட்டத்தின்படி இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் அரசின் வழிகாட்டுதல்படி நம்பர் பிளேட் இருக்க வேண்டும். ஆனால் மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிராக வாகன உரிமையாளர்கள் தாங்கள் விரும்பும் அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்களின் பெயர், படங்களை நம்பர் பிளேட்டில் ஒட்டிக் கொள்கிறார்கள். மேலும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப எண்களை வித்தியாசமான வடிவங்களில் எழுதி கொள்கின்றனர். இது சட்டவிரோதமானது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போலீசாரிடம் புகார் அளித்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே நம்பர் பிளேட்டுகளில் விதிமீறல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, இதுதொடர்பாக அதிகாரிகளிடம் மனுதாரர் அளித்த மனுவில், விதிகளை மீறி எழுதப்பட்டுள்ள நம்பர் பிளேட்டுகளை அகற்றவில்லை என்றால் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் உத்தரவின்பேரில் நாங்களே நடவடிக்கை எடுப்போம் என மிரட்டும் வகையில் தெரிவித்துள்ளார் என்றார். இதற்கு நீதிபதிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். மனுதாரரின் நடவடிக்கையை ஏற்க இயலாது. இதற்காக அவருக்கு அதிகபட்ச அபராதம் விதிப்போம். இதுபோன்ற மனுவை இனி அளிக்கக்கூடாது என எச்சரித்தனர். இதையடுத்து அந்த வரியை நீக்கிவிடலாம் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், இருசக்கர, நான்கு சக்கர வாகன நம்பர் பிளேட்டுகளில் விதிகளை மீறி எழுதுவது, தலைவர்கள், நடிகர்களின் படத்தை ஒட்டுவது போன்றவை கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் நாள்தோறும் வாகன சோதனை நடத்தி, நம்பர் பிளேட் விவகாரத்தில் விதிமீறல் இருந்தால் அதிகபட்ச அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.