தீபாவளி பண்டிகைக்குப் பிறகு மாநகரில் குவிந்த குப்பைகளை அகற்றி, தூய்மைப் பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில், மதுரை மாநகராட்சியுடன் இணைந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டி.ஒய்.எப்.ஐ.) சார்பில் 7-வது ஆண்டு மாபெரும் தூய்மைப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தெற்கு மாசி வீதி விளக்குத்தூண் பகுதியில் டி.ஒய்.எப்.ஐ. மாநிலச் செயலாளர் எஸ். கார்த்தி தலைமையில் நடைபெற்ற இப்பணியை மதுரை மாநகராட்சி மேயர் (பொறுப்பு) தி. நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தீபாவளி தினத்தன்று வணிகப் பகுதிகள் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றும் பணியில் டி.ஒய்.எப்.ஐ. நிர்வாகிகள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இணைந்து ஈடுபட்டனர்.

மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள், மாசி வீதிகள், வெளி வீதிகள், விளக்குத்தூண் சந்திப்பு, தெப்பக்குளம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையப் பகுதிகள், வைகை ஆற்றின் வடகரை மற்றும் தென்கரை, பைபாஸ் சாலை உள்ளிட்ட குப்பைகள் அதிகம் சேரும் முக்கியப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணியில் வழக்கமான குப்பை சேகரிப்பு வாகனங்களுடன் கூடுதலாக 11 ஜே.சி.பி. இயந்திரங்கள், 5 பாப்கேட் இயந்திரங்கள், 9 டிப்பர் லாரிகள், 42 டிராக்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி வரை மட்டும் 128.40 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் 2-ஆம் தேதி இதே நேரத்தில் 95.08 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 33.32 மெட்ரிக் டன் பண்டிகைக் காலக் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. முன்னதாக, தீபாவளி தினத்தன்று 137 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
இப்பணியில் மாநகராட்சி நகர் நல அலுவலர் மருத்துவர் அரவிந்த் ஜோதி, உதவி நகர் நல அலுவலர் மருத்துவர் அபிஷேக், சி.ஐ.டி.யு. மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் எம். பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் துணைச் செயலாளர் சு. கிருஷ்ணன், அல் அமீன் பள்ளி தலைமை ஆசிரியர் சேக் நபி, டி.ஒய்.எப்.ஐ. மாவட்டத் தலைவர் டி. செல்வா, மாவட்டச் செயலாளர் எஸ். வேல் தேவா, பொருளாளர் க. கௌதம் பாரதி, மாநிலக் குழு உறுப்பினர் சுகஸ்ரீ உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் டி.ஒய்.எப்.ஐ. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
டி.ஒய்.எப்.ஐ. மாநிலச் செயலாளர் எஸ். கார்த்தி பேட்டி:
இதுகுறித்து எஸ். கார்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தீபாவளி பண்டிகையை அனைவரும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கொண்டாட விரும்புகின்றனர். அதேபோல் தூய்மைப் பணியாளர்களும் தங்களது குடும்பத்தினருடன் பண்டிகையைக் கொண்டாடி ஓய்வெடுக்க வேண்டும். ஆனால், பண்டிகைக்கு மறுநாள் காலையிலேயே ஆயிரக்கணக்கான டன் குப்பைகளை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர்.
தூய்மைப் பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைத்து அவர்களுக்கு உதவும் நோக்கத்திலும், நமது குப்பைகளை நாமே அகற்ற வேண்டும் என்ற சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கடந்த 7 ஆண்டுகளாக மதுரையில் தீபாவளிக்கு மறுநாள் இந்தத் தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகிறோம்.

மதுரையை குப்பை நகரம் என்று கூறிக்கொண்டிருப்பதைவிட, களத்தில் இறங்கி குப்பைகளை அகற்றுவதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களது நோக்கம். தமிழகம் முழுவதும் டி.ஒய்.எப்.ஐ. சார்பில் இந்த இயக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தூய்மைப் பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும். குப்பைகளை அகற்றுவதற்குத் தேவையான உபகரணங்களை அதிகப்படுத்த வேண்டும். மேலும், மக்கும் குப்பை, மக்காத குப்பை உள்ளிட்ட நான்கு வகையான குப்பைகளைப் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் மாநகராட்சி இன்னும் தீவிரமாக ஏற்படுத்த வேண்டும்.
நமது ஊரின் தூய்மையையும் சுகாதாரத்தையும் பாதுகாப்பது அனைவரின் சமூகப் பொறுப்பு என்றார்.