• Tue. Apr 22nd, 2025

ஏப்ரல் 12ல் மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Byவிஷா

Mar 14, 2024

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா, ஏப்.12ம் தேதி காலை 9.55 மணிக்கு மேல் 10.19க்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில். மீனாட்சியம்மன் கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக சித்திரை திருவிழா விளங்குகிறது. இந்த விழா, மதுரை மட்டுமல்லாமல் தென் மாவட்ட மக்களின் மிக முக்கிய கொண்டாட்டங்களில் ஒன்றாகவும் உள்ளது. இதில் முக்கிய நிகழ்ச்சிகளாக பார்க்கப்படும் மீனாட்சி திருக்கல்யாணமும், அழகரின் வைகை ஆற்று வைபவமும் மதுரை மக்களின் வாழ்வியலோடு கலந்துவிட்ட ஒன்று. அந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள், நாடு முழுவதும் இருந்து வருவது வழக்கம்.
இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிழாவிற்கான அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சித்திரை திருவிழா ஏப். 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா, ஏப்.12ம் தேதி காலை 9.55 மணிக்கு மேல் 10.19க்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கோயில் பட்டர்கள் கொடியேற்றி திருவிழாவை துவக்கி வைக்கின்றனர். பின்னர் கொடி மரத்திற்கு பூ மாலை சூட்டி, மலர்கள் தூவி சிறப்பு தீபாராதனை நடைபெறும். விழாவை முன்னிட்டு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அன்று இரவு 7 மணிக்கு சுவாமி சுந்தரேஸ்வரர் சிம்ம வாகனத்திலும், மீனாட்சியம்மன் கற்பக விருட்சக வாகனத்திலும் மாசி வீதிகளில் உலா வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் உலா வருகின்றனர். ஏப். 19ம் தேதி இரவு 7.35 மணிக்கு மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம், ஏப்.20ம் தேதி திக்கு விஜயம், ஏப்.21ம் தேதி காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏப்.22ம் தேதி காலை 6.30 மணிக்கு மாசி வீதிகளில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன் தேரோட்டம் நடைபெறுகிறது.