வணிகம் உட்பட எந்த செயல்களையும் தாமதமின்றி, உடனே தொடங்கினால்தான் வெற்றி கிடைக்கும் என, ரோட்டரி துணை ஆளுநர் மற்றும் மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு பேசினார்.
பிசினஸ் மாஸ்டர் கம்யூனியன் வணிக அமைப்பின், 4வது ஆண்டு தொடக்க விழா, மதுரை தாஜ் கேட்வே ஓட்டலில் நடைபெற்றது. துணை இயக்குனர் எஸ். மகாலிங்கம் வரவேற்றார்.
மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, மைக்கேல் கல்வி நிறுவனங்களின் சேர்மன் ஸ்டாலின் ஆரோக்யராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிர்வாக இயக்குனர் கோபிசன், இயக்குனர்கள் ஜெயபிரகாஷ், வித்யா ஜார்ஜ், டைனமிக் சேப்டர் பொறுப்பாளர்கள் சரவணகுமார், ராஜ ராஜேஸ்வரன், மெஜஸ்டிக் பொறுப்பாளர்கள் ரவின், முஹம்மது இட்ரிஸ், அசோக் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நெல்லை பாலு
பேசியதாவது; நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது தொழில்கள்தான். தொழில்களை வைத்து தான் நாட்டின் முன்னேற்றம் மதிப்படப்படுகிறது. தொழிலால் வளர்ந்த நாடுகளில் முதன்மையானது ஜப்பான். ஹிரோஷிமா நகரம் அழிந்தபோது அங்கிருந்தோரின் வீடுகளின் வாசலிலே ‘இப்போது இல்லாவிட்டால் எப்போது? உடனே தொடங்குங்கள்’ என்பதை ஹைக்கூ கவிதையாக எழுதி வைக்கும் வழக்கம் இருந்ததாம்.
எதையும் உடனே செய்ய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு அவர்கள் தொழில் செய்ததால்தான் அந்த நாடு இன்று உலகின் பெரிய பொருளாதார நாடாக உயர்ந்திருக்கிறது. சிறிய தொழில், பெரிய தொழில் எதுவாக இருந்தாலும் உடனடியாக தாமதம் இன்றி செய்தால் வெற்றி கிட்டும்” இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்வில் திறம்பட வணிகம் செய்த உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவம் செய்யப்ப்பட்டன. கடந்த காலங்களில் இந்த அமைப்பின் தொடர்புகள் மூலமாக, 600 கோடிக்கும் அதிகமான வணிகம் ஈட்டியதைக் குறிப்பிட்டு வாழ்த்தினர். மேலும், வணிகத்தை அடுத்தகட்டத்திற்கு முன்னோக்கி கொண்டு செல்வதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. செயலாளர் சக்திதேவி தொகுத்து வழங்கினார்.