• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை எயம்ஸ் கட்டுமானப் பணிகள் விறுவிறு

Byவிஷா

Feb 21, 2025

தென் மாவட்ட மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும் மதுரை எயம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, பிரதமர் மோடியும் நேரடியாக வந்து அடிக்கல் நாட்டினார். அவர் அடிக்கல் நாட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில், மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான மோதல் போக்கு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனை வெறும் அறிவிப்பாகவே இருந்து வந்தது. இதே காலக்கட்டத்தில், மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு, பயனர்களுக்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆனால் தமிழகத்தில் மட்டுமே, மத்திய மாநிலஅரசுகளுக்கு இடையே ஒத்த கருத்து ஏற்படாத நிலையில், நிதி பிரச்சினை காரணமாக எந்த வித பணிகளும் துவங்காமல் பல ஆண்டு காலம் பூஜை போட்ட செங்கல் மட்டும் தான் கட்டுமான பணி இடத்தில் காணப்பட்டது. இதனை தமிழக அரசியல் கட்சிகள் விமர்சித்தது. மற்ற மாநிலங்களில் செயல்பட தொடங்கிய எஸ்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் எங்கே என கேள்வி கேட்கப்பட்டது. பல்வேறு சலசலப்புகளைத் தொடர்ந்து, அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த 2024ம் ஆண்டுதான், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதன் படி தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்திலுள்ள தோப்பூரில் 220 ஏக்கர் பரப்பளவில் பரந்த வளாகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டப்பட்டுவருகிறது. மே 22, 2024 அன்று தொடங்கப்பட்ட இந்த கட்டுமானத் திட்டம் 2025 பிப்ரவரி மாத நிலவரப்படி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதற்கட்ட கட்டிடங்களுக்கான கட்டுமானப் பணிகள் 24சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2027 பிப்ரவரிக்குள் முழு கட்டுமானமும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்டத்தில் கல்வி வளாகம், வெளிநோயாளர் மருத்துவ சேவைகள், மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகள் மற்றும் அத்தியாவசிய சேவை கட்டிடங்கள் போன்ற முக்கிய வசதிகள் அடங்கியுள்ளன. முதற்கட்டப் பணிகள் தொடக்க தேதியிலிருந்து 18 மாதங்களுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது கட்டத்தில் மீதமுள்ள உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். முழு கட்டுமானத் திட்டத்தையும் பிப்ரவரி 2027 க்குள் 33 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை, ஒட்டுமொத்தமாக கட்டுமானத்தில் 14.5சதவீதம் முன்னேற்றம் அடைந்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுள்ள 900 படுக்கைகளில் 150 படுக்கைகள் பிரத்யேகமாக தொற்று நோய்க்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கல்வி வளாகம், மருத்துவமனை வளாகம், விடுதி வளாகம், குடியிருப்பு வளாகம், விளையாட்டு வசதிகள் மற்றும் 750 இருக்கைகள் கொண்ட ஆடிட்டோரியம் ஆகியவை அடங்கியுள்ளன. இது மாணவர்கள் மற்றும் நோயாளிகள் இருவருக்கும் ஒரு முழுமையான கட்டிடமாக மதுரை எய்ம்ஸ் அமையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.