லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் (Luis Walter Alvarez) ஜூன் 13, 1911ல் சான் பிரான்சிஸ் கோவில் பிறந்தார். இவரது தந்தை வால்டர் சி.அல்வாரெஸ், ஒரு மருத்துவர் ஆவார். இவரது தாய் ஹாரியட் நீ ஸ்மித் ஆவார். இவரது ஸ்பானிஷ் மருத்துவரான லூயிஸ் எஃப் என்பவரின் பேரன் ஆவார். இவர் கியூபாவில் சிறிது காலம் வாழ்ந்தார். பின்னர் இறுதியாக அமெரிக்காவில் குடியேறினார். ஸ்பெயினின் அஸ்டூரியாஸில், தொழுநோயைக் கண்டறிவதற்கான சிறந்த முறையைக் கண்டுபிடித்தார். லூயிசுக்கு கிளாடிஸ் எனும் ஒரு மூத்த சகோதரி மற்றும் பாப் எனும் இளைய சகோதரனும் பெர்னிஸ் எனும் இளைய சகோடதரியும் இருந்தனர். இவரது அத்தை, மாபெல் அல்வாரெஸ், கலிபோர்னியா கலைஞராக இருந்தார். அவர் நெய்யோவியத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.
லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் 1918 முதல் 1924 வரை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மேடிசன் பள்ளியிலும், பின்னர் சான் பிரான்சிஸ்கோ பாலிடெக்னிக் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். 1926 ஆம் ஆண்டில், இவரது தந்தை மாயோ மருத்துவச் சிற்றில் ஒரு ஆராய்ச்சியாளரானார். பின்னர் இவரது குடும்பம் மினசோட்டாவின் ரோசெஸ்டருக்கு குடிபெயர்ந்தது. அங்கு அல்வாரெஸ், ரோசெஸ்டர் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இவர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயில வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால், ரோசெஸ்டரில் உள்ள தனது ஆசிரியர்களின் வற்புறுத்தலின் பேரில், இவர் அதற்கு பதிலாக சிகாகோ பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கு இவர் 1932ல் இளங்கலைப் பட்டமும், 1934ல் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1936ல் இவரது முனைவர் பட்டம் பெற்றார்.
1936ல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு, அல்வாரெஸ் பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஏர்னஸ்ட் லாரன்சின் கதிர்வீச்சு ஆய்வகத்தில் வேலைக்குச் சென்றார். கதிரியக்கக் கருக்களில் கே-எலக்ட்ரான் பிடிப்பைக் கண்காணிக்க அல்வாரெஸ் பல சோதனைகளை மேற்கொண்டார். இது பீட்டா சிதைவு கோட்பாட்டின் மூலம் கணிக்கப்பட்டது. 1940ம் ஆண்டில் அல்வாரெஸ் எம்ஐடி கதிர்வீச்சு ஆய்வகத்தில் சேர்ந்தார். அங்கு இவர் இரண்டாம் உலகப் போரின் கதிரலைக் கும்பா திட்டங்களில் பங்களித்தார். மன்காட்டன் திட்டத்தில் ராபர்ட் ஓப்பன்ஹீமர்மருக்காக பணிபுரிய லாஸ் அலமோஸுக்கு வருவதற்கு முன்பு அல்வாரெஸ் சிகாகோ பல்கலைக்கழகத்தில் என்ரிகோ பெர்மிக்கான அணு உலைகளில் பணிபுரிந்தார். அல்வாரெஸ் வெடிக்கும் வில்லைகள் வடிவமைத்தல் மற்றும் வெடிக்கும் பலச் சுற்று வெடிபொருள் தயாரிப்பு ஆகியவற்றில் பணியாற்றினார்.
அல்வாரெஸ் ஜேசன் பாதுகாப்பு ஆலோசனைக் குழு, போஹேமியன் சங்கம் மற்றும் குடியரசுக் கட்சியின் உறுப்பினராக இருந்தார் . அல்வாரெஸ் வானியற்பியல் விஞ்ஞானி ரிச்சர்ட் முல்லரின் ஆலோசகராக இருந்தார். லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் 1968 ஆம் ஆண்டில் ஹைட்ரஜன் குமிழி அறையின் வளர்ச்சிக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார். இது துகள் இயற்பியலில் அதிர்வு நிலைகளைக் கண்டறிய உதவுகிறது. குமிழ் அறை (bubble chamber) என்பது அயனியாக்கும் தன்மை கொண்ட துகள்களின் இயக்கத்தை, அவைகளின் பாதையை அறிய கூடிய அதிவெப்பமூட்டப்பட்ட ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட நீர்மம் (பொதுவாக நீர்ம ஐதரசன்) கொண்ட ஒரு கலன் ஆகும். முகிலறைகள் குமிழறைகளின் தத்துவத்திலேயே வேலை செய்கின்றன. ஆனால், முகிலறைகளில் அதிக வெப்பமாக்கிய நீர்மத்திற்குப் பதிலாக அதிகம் நிரம்பிய ஆவி பயன்படுத்தப்படுகிறது.
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பிசிக்ஸ் இவரைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், “லூயிஸ் அல்வாரெஸ் இருபதாம் நூற்றாண்டின் மிக அற்புதமான மற்றும் உற்பத்தி சோதனை இயற்பியலாளர்களில் ஒருவர்.”எனக் கூறியது. நோபல் பரிசு பெற்ற, அமெரிக்க சோதனை இயற்பியலாளர் லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் செப்டம்பர் 1, 1988ல் தனது 77வது அகவையில் பெர்க்லி, கலிபோர்னியாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அவரது ஆவணங்கள் பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள பான்கிராப்ட் நூலகத்தில் உள்ளன.