• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

Byவிஷா

Dec 20, 2022

நற்றிணைப் பாடல் 79:

சிறை நாள் ஈங்கை உறை நனி திரள்வீ,
கூரை நல் மனைக் குறுந் தொடி மகளிர்
மணல் ஆடு கழங்கின், அறை மிசைத் தாஅம்
ஏர் தரலுற்ற இயக்கு அருங் கவலைப்
பிரிந்தோர் வந்து, நப்புணரப் புணர்ந்தோர்
பிரிதல் சூழ்தலின், அரியதும் உண்டோ?”
என்று நாம் கூறிக் காமம் செப்புதும்;
செப்பாது விடினே, உயிரொடும் வந்தன்று-
அம்ம! வாழி, தோழி!-
யாதனின் தவிர்க்குவம், காதலர் செலவே?

பாடியவர்: கண்ணகனார்
திணை: பாலை

பொருள்:

 காதலன் பிரிவை எப்படித் தடுக்கலாம் என்று கூறுமாறு தோழியிடம் தலைவி கேட்கிறாள். நல்ல கூரை வீட்டில் வாழும் மகளிர் தம் வளையல் கைகளால் மணலில் கழங்குக் காய்களை உருட்டி விளையாடுவர்.  அப்போது அந்தக் கழங்குக் காய் உருள்வது போல ஈங்கைப் பூ தரையில் விழுந்து உருளும். அப்படி ஈங்கை உதிரும் பிரிவுப் பாதை வழியே பொருளீட்டும் ஏர் உழவு செய்வதற்காக அவர் பிரிந்தார். பிரிந்தவர் பொருளுடன் திரும்பினார். மீண்டும் பிரிந்து செல்லத் திட்டமிடுகிறார். நமக்கு அவரைக் காட்டிலும் மேலான அரிய பொருள் உண்டோ என்று அவரிடம் கூறவேண்டும். எனக்கு தலைவன் மேல் இருக்கும் அன்பின் மிகுதியைப் பற்றி அவரிடம் கூறவேண்டும். சொல்லாமல் விட்டுவிட்டால் நம் உயிருக்கு அவர் பிரிவானது உலை வைத்துவிடும். இப்படிச் சொல்லலாம். இல்லாவிட்டால் வேறு எந்த வகையில் சொல்லி அவர் செல்வதைத் தடுக்கலாம்? தோழி! எண்ணிப் பார்த்துச் சொல். – தலைவி தோழியிடம் இப்படி வினவுகிறாள்.