• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நற்றிணைப் பாடல் 175:

நெடுங் கடல் அலைத்த கொடுந் திமிற் பரதவர்
கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ
மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய
சிறு தீ விளக்கில் துஞ்சும் நறு மலர்ப்
புன்னை ஓங்கிய துறைவனொடு அன்னை
தான் அறிந்தன்றோ இலளே பானாள்
சேரிஅம் பெண்டிர் சிறு சொல் நம்பி
சுடுவான் போல நோக்கும்
அடு பால் அன்ன என் பசலை மெய்யே

பாடியவர்: ஆசிரியர் பெயர் இடம் பெறவில்லை
திணை: நெய்தல்

பொருள்:

வளைந்த திமில் படகில் சென்று பரந்த கடலைக் கலக்கி கொழுத்த மீன்களை அள்ளிக் கொண்டுவந்து கடலோர மணலில் குவித்து, கிளிஞ்சல் விளக்கில் மீன்-எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வைத்துக்கொண்டு தூங்குவர். புன்னை மரம் ஓங்கி வளர்ந்திருக்கும் துறை அது. அத்தகைய துறையை உடையவன் தலைவனாகிய துறைவன். அவனை என் தாய் பார்த்ததில்லை. என்றாலும் தெருவில் உள்ள பெண்கள் பேசிக்கொள்வதைக் கேட்டு என்னைச் சுடுவது போலப் பார்க்கிறாள். பால் போன்ற என் மேனி பசந்திருப்பதைப் பார்த்துக் கேட்கிறாள். தலைவி தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.