

தமிழகத்தை உலுக்கிய படுகொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி அதிரடி தீர்ப்பு
கோவில் திருவிழாவில் மரியாதை அளிப்பது தொடர்பான முன் விரோதத்தில் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (65), சண்முகநாதன்(31), சந்திரசேகர் (34) ஆகிய 3 பேரும், கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டனர்.
.இந்த சம்பவத்தில் மேலும் 5 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களில் தனசேகரன் (32) என்பவர் சம்பவம் நடைபெற்று 1½ ஆண்டுக்கு பிறகு இறந்தார்.இந்த வழக்கில் ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த சுமன், அருண்குமார், சந்திரக்குமார், அக்னிராஜ், ராஜேஷ் உள்ளிட்ட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இவர்களில் 2 பேர் வழக்கு விசாரணையின் போது இறந்து விட்டனர். 3 பேர் சிறுவர்களாக இருந்தனர். ஒருவர் தலைமறைவானார்.இதனால், மீதமுள்ள 27 பேர் மீது சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில், இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.இந்த வழக்கில் 27 பேரும் குற்றவாளிகள் என கடந்த 1-ம் தேதி கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், கச்சநத்தம் 3 பேர் படுகொலை வழக்கில் குற்றவாளிகள் 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி முத்துக்குமரன் அதிரடி தீர்ப்பளித்தார். இதையடுத்து, குற்றவாளிகள் 27 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
