உசிலம்பட்டி அருகே மூதாட்டியின் மறைவிற்கு, அவர் ஆசைப்படி ஆடல் பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன், அவரது 70க்கும் மேற்பட்ட பேரன் பேத்திகள் இறுதி மரியாதை செய்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னப்பாலார்பட்டியைச் சேர்ந்தவர் பூசாரி பரமத்தேவர் மனைவி நாகம்மாள்., இவரது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்த நிலையில் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக தனது 96வது வயதில் இந்த மூதாட்டி உயிரிழந்தார்.


இவருக்கு 2 மகன்கள், நான்கு மகள்கள் உள்ள சூழலில், மூன்று தலைமுறையைக் கண்ட இந்த முதாட்டிக்கு தற்போது வரை இவரது பேரன் பேத்தியாக 78 பேர் உள்ளனர்.
இந்நிலையில் தனது இறப்பிற்கு பின் இறுதி சடங்கு நிகழ்வை மற்றவர்களை போல சோகத்தோடு இல்லாது, ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் வெகுவிமர்சையாக கொண்டாடி சந்தோசமாக வழி அனுப்ப வேண்டும் என மூதாட்டி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

அதன் படி மூதாட்டியின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம், பேரன் பேத்திகள் இணைந்து இன்று ஆடல் பாடல் நிகழ்ச்சி, ரேடியோ, குடும்ப பெண்களின் கும்மியாட்டம் மற்றும் சிறுவர் சிறுமியரின் நடனம், கிராமிய கலை நிகழ்ச்சி என கொண்டாடி இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

பெரும்பாலும் கோவில் திருவிழா, இல்ல விழாக்களில் மட்டுமே ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் சூழலில் மூதாட்டியின் ஆசைப்படி இறப்பு வீட்டில் ஆடல் பாடல் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் இறுதி மரியாதை செய்யப்பட்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.





